VIDEO: கோலியை பிடிக்காதவங்க கூட இந்த ‘வீடியோ’ பார்த்தா நிச்சயம் மனசு மாறிடுவாங்க.. மும்பை ரசிகர்களையும் உருக வைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்ததால் கண் கலங்கிய இஷான் கிஷனுக்கு பெங்களூரு கேப்டன் விராட் கோலி ஆறுதல் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் (IPL) தொடரின் 39-வது போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் விராட் கோலி (Virat Kohli) தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் (RCB), ரோஹித் ஷர்மா (Rohit Sharma) தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் (MI) மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 56 ரன்களும், கேப்டன் விராட் கோலி 51 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து பேட்டிங் செய்த மும்பை அணி, 18.1 ஓவர்களில் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 54 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் மும்பை அணி தோல்வி அடைந்ததும் சோகமாக இருந்த இளம் வீரர் இஷான் கிஷனுக்கு (Ishan Kishan) பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி ஆறுதல் கூறினார். இப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் டி காக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதில் சாஹல் வீசிய 9-வது ஓவரில் எதிர்பாராத விதமாக டிக் காக் (24 ரன்கள்) ஆட்டமிழந்தார்.

இதனை அடுத்து இளம் வீரர் இஷான் கிஷன் களமிறங்கினார். இவர் ஆரம்பம் முதலே பேட்டிங்கில் சற்று தடுமாறினார். அப்போது மேக்ஸ்வெல் வீசிய 10-வது ஓவரின் 4-வது பந்தை எதிர்கொண்ட இஷான் கிஷன், அதை நேராக பவுண்டரிக்கு விளாசினார். ஆனால் அது எதிர்பாராத விதமாக நான் ஸ்டைக்கர் எண்டில் இருந்த ரோஹித் ஷர்மாவின் கையில் பலமாக தாக்கியது.

இதனை அடுத்து அந்த ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட ரோஹித் ஷர்மா, தேவ்தத் படிக்கலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதுதான் ஆட்டத்தில் ஒரு திரும்புமுனையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து இஷான் கிஷனும் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி, மும்பை அணி தோல்வியை தழுவியது.

இதனால் சோகமான இஷான் கிஷன் டக் அவுட்டில் கண்கலங்கியபடி அமர்ந்திருந்தார். அப்போது வந்த பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, இஷான் கிஷனை தனியாக அழைத்து ஆறுதல் கூறினார். பொதுவாக விராட் கோலியை கோபமானவர் என்றும், அவரை அணுகுவது கடினம் என்றும் விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.

ஆனால் எதிரணி வீரராக இருந்தாலும், வளர்ந்து வரும் இளம் வீரருக்கு கடினமான சூழல்களை எப்படி கையாள்வது என விராட் கோலி அறிவுரை வழங்கியது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், பலரும் விராட் கோலியை பாராட்டி வருகின்றனர். வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் இஷான் கிஷன் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்