'என்ன நடந்தாலும் பரவாயில்ல... அதுக்கு வாய்ப்பில்ல ராஜா!'.. விடாப்பிடியாக அடம்பிடிக்கும் கோலி!.. இப்படியே போன டீம் என்ன ஆகும்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மூன்று ஆட்டங்களில் தொடர்ந்து சொதப்பி வரும் கே எல் ராகுல் குறித்த கேள்விக்கு கேப்டன் கோலி அதிர்ச்சிக்குரிய பதிலை தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக கேப்டன் கோலி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 46 பந்துகளில் 77 ரன்கள் குவித்து அசத்தினார்.

அதன்பிறகு 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 158 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பாக துவக்க வீரர் பட்லர் 83 ரன்களும், பேர்ஸ்டோ 40 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் சேர்த்து ஒரு ரன் மட்டுமே அடித்துள்ள ராகுலின் ஆட்டம் தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.

மேலும் இனி வரும் போட்டிகளில் அவருக்கு இடம் கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில், முதல் போட்டியில் ஒரு ரன்னும் அதற்கு அடுத்து தொடர்ந்து இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆகியுள்ள ராகுல் இனியும் அணிக்கு தேவையா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், நேற்றைய போட்டியின் முடிவில் ராகுலின் ஆட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, "ராகுல் ஒரு சாம்பியன் பிளேயர். கடந்த 2-3 ஆண்டுகளில் அவரது ரெக்கார்டை எடுத்துப் பார்த்தால் அவர் உலகின் மிகச்சிறந்த t20 பேட்ஸ்மன் என்பது உங்களுக்கு புரியும். ஒரு சில போட்டிகள் அவர் சரியாக விளையாடவில்லை என்றால் அது பெரிய விடயம் கிடையாது.

ரோஹித் மற்றும் ராகுல் தான் தொடர்ந்து இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள். டி20 போட்டிகளை பொருத்தவரை 5 - 6 பந்துகள் தான் முக்கியமானது. அதனை மாற்றி விட்டால் நிச்சயம் அவரது ஆட்டம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார். எது எப்படி இருப்பினும் ராகுலை அணியில் இருந்து விடுவிக்க முடியாது" என்று கோலி உறுதியுடன் கூறியது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்