‘ஆர்.சி.பி… ஆர்.சி.பி…’ என கோஷமிட்ட ரசிகர்கள்; அடுத்து சிராஜ் செய்த காரியம்! ViralVideo

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

களத்தில் மட்டுமல்ல, களத்துக்கு வெளியிலும் பலரது நெஞ்சங்களை கொள்ளை கொண்டு வருகிறார் இந்தியாவின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் முகமது சிராஜ்.

Advertising
>
Advertising

இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. வெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மட்டுமே இரண்டு அணிகளும் விளையாடிய காரணத்தினால் இந்த வெற்றியின் மூலம் தொடரைக் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. முதல் போட்டியிலும் இந்தியா வெற்றி பெறும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி வரை ஒரு விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல் நியூசிலாந்து அணி ஆட்டத்தை ‘த்ரில்’ டிரா செய்தது.

இப்படியான சூழலில் தான் இந்திய அணி, நியூசிலாந்தை அனைத்து தளங்களிலும் மண்ணைக் கவ்வ வைத்து இரண்டாவது போட்டியில் அபார வெற்றியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, ஆண்களுக்கான ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

வலுவான நியூசிலாந்து அணியை வீழ்த்திய கையோடு, அடுத்ததாக தென் ஆப்ரிக்கா சென்று டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது இந்தியா. இந்த தொடரில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்திய அணியின் இருக்கும் பல சீனியர் வீரர்களுக்கு அதிக அழுத்தம் உள்ளது. பேட்ஸ்மேன்களைப் பொறுத்தவரை புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கட்டாயம் சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவிக்க வேண்டும் என்கிற நெருக்கடி உள்ளது.

பவுலிங் பிரிவைப் பொறுத்தவரை முன்னணி வேகப் பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவும் அழுத்தத்தில் இருக்கிறார். முகமது சிராஜ், ஷ்ராதுல் தாக்கூர் போன்ற வேகப் பந்து வீச்சாளர்கள் இந்தியாவுக்காக தொடர்ந்து நன்றாக செயல்பட்டு வருவதே இதற்கு காரணமாக அமைந்துள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் முகமது சிராஜ்.

விராட் கோலி தலைமையிலான ஆர்.சி.பி, ஐபிஎல் அணியில் அசத்தலாக பந்து வீசி அனைவரது கவனத்தையும் பெற்றார் சிராஜ். தொடர்ந்து இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் சிராஜ், அதிரடியான பவுலிங்கிற்கு பிரபலம் அடைந்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டிலும் 4 ஓவர்கள் மட்டுமே வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார் சிராஜ்.

இந்தப் போட்டி முடிந்ததைத் தொடர்ந்து நடந்த போஸ்ட் மேட்ச் நிகழ்ச்சியில், அவரைப் பார்த்து ஆர்ப்பரித்த ஆர்.சி.பி ரசிகர்கள், ‘ஆர்.சி.பி… ஆர்.சி.பி…’ என கோஷமிடத் தொடங்கினார்கள்.

இதைப் பார்த்த சிராஜ், ‘ஆர்.சி.பி என்று சொல்லாதீர்கள்… இந்தியா என சொல்லுங்கள்’ என சைகையாலேயே சொன்னார். இதைக் கேட்ட மைதானத்தில் இருந்த பெரும்பான்மையான ரசிகர்கள் சிராஜின் நடத்தையைப் பாராட்டும் வகையில் கைத்தட்டினார்கள். மேலும் அனைவரும், ‘இந்தியா… இந்தியா…’ என கோஷமிட்டனர். இது சம்பந்தமான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

CRICKET, MOHAMMED SIRAJ, RCB, TEAM INDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்