'கடைசி ஒரு ஓவர்ல மட்டுமே 22 ரன்!!!'... 'செஞ்சுரி அடிச்சே ஆகணும்'... 'கிடைத்த வாய்ப்பில் மிரட்டி எடுத்த இளம்வீரர்!!!"...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையில் நடந்து வரும் டெஸ்ட் பயிற்சி ஆட்டத்தில் இளம் வீரர் ரிஷப் பந்த் அசத்தலாக விளையாடி சதமடித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியில் ரிஷப் பந்த் மாற்று வீரராக மட்டுமே இடம் பெற்று இருப்பதால், ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் வாய்ப்பை இழந்த நிலையில், அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்றே கூறப்பட்டது. அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் விரிதிமான் சாஹா  பேட்டிங்கிலும் நல்ல பார்மில் இருப்பதால் பந்த்திற்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்ற சூழலே இருந்தது. இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கு முன் ஆஸ்திரேலியா ஏ அணியுடன் இந்திய வீரர்கள் பயற்சிப் போட்டியில் பங்கேற்றனர். அதில் முதல் பயிற்சிப் போட்டியில் ரிஷப் பந்த்திற்கு அணியில் இடம் அளிக்கப்படாததால் அவருக்கு இனி இடம் கிடைக்காது எனவே கூறப்பட்டது.

அத்துடன் அந்த முதல் பயிற்சிப் போட்டியில் விரிதிமான் சாஹா அரைசதம் அடித்து அவருடைய பார்மை மீண்டும் நிரூபிக்க, ரிஷப் பந்திற்கு அது மேலும் சிக்கலையே ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இரண்டாவது பயிற்சிப் போட்டியில் ரிஷப் பந்திற்கு வாய்ப்பு கிடைக்க, கிடைத்த கடைசி வாய்ப்பில் அவர் பெரிய இன்னிங்க்ஸ் ஆடினால் மட்டுமே அணியில் தன் இடத்தை தக்க வைக்க முடியும் என்ற சூழல் உருவானது. அதை உணர்ந்திருந்தபோதும், பந்த் முதல் இன்னிங்க்ஸில் 4 ரன்களில் ஆட்டமிழக்க, மீண்டும் விமர்சனம் எழுந்தது.

அதன்பிறகு தற்போது இரண்டாம் இன்னிங்க்ஸில் அவருக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்க, ஆறாம் வரிசையில் பேட்டிங் செய்த ரிஷப் பந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நாளின் கடைசி ஓவருக்கு முன் 67 பந்துகளில் 81 ரன்கள் குவித்து இருந்தார். அப்போது கடைசி ஓவரில் சதம் அடித்தே ஆக வேண்டும் என முடிவு செய்த பந்த், அந்த ஓவரில் 4, 4, 6, 4, 4 என வரிசையாக அடித்து 22 ரன்கள் குவித்து சதத்தை எட்டினார். இதன்மூலம் 73 பந்துகளில் 103 ரன்கள் குவித்த ரிஷப் பந்த் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதோடு ஏற்கெனவே ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தவர் என்பதால் அவருக்கு தற்போது வாய்ப்பு கிடைக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்