"இப்போ எதுக்கு இத ஊதி 'பெருசு' பண்றீங்க??.. 'மரியாதை'யா எல்லாத்தையும் நிறுத்திடுங்க சொல்லிட்டேன்.." திட்டித் தீர்த்த 'வாகன்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இளம் வீரரான ஓல்லி ராபின்சன் (Ollie Robinson), நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், அறிமுகமாகியிருந்தார்.

இந்த போட்டியில், சிறப்பாக ஆடி, கிரிக்கெட் கேரியரை அசத்தலாக ராபின்சன் தொடங்கியிருந்தாலும், அவருக்கு மிகப்பெரிய சிக்கல் ஒன்று கூடவே உருவாகியது. சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு, இனவெறி மற்றும் பாலியல் ரீதியாக அவர் செய்திருந்த ட்வீட்கள் வைரலானதால் கடுமையான விமர்சனத்தை ராபின்சன் சந்தித்தார். இதுகுறித்து, நடவடிக்கை எடுத்த இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம், அவரை சஸ்பெண்ட்டும் செய்தது.

இதனைத் தொடர்ந்து, மற்ற இங்கிலாந்து வீரர்களின் சமூக வலைத்தள பக்கங்களும் ஆராயப்பட்டு வருகிறது. இதில், இங்கிலாந்து அணியின் ஒரு நாள் போட்டி மற்றும் டி 20 கேப்டன் இயான் மோர்கன் (Eoin Morgan), ஜேம்ஸ் ஆண்டர்சன் (James Anderson) மற்றும் ஜோஸ் பட்லர் (Jos Buttler) ஆகியோர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், பட்லர் மற்றும் மோர்கன் ஆகியோர், நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் பிரெண்டன் மெக்கலத்துடன் இணைந்து, இந்தியர்களின் ஆங்கிலத்தை கிண்டல் செய்யும் வகையிலான சில ட்வீட்களை செய்துள்ளனர். இது தொடர்பான ட்வீட்கள் நீக்கப்பட்டிருந்தாலும், அவற்றின் ஸ்க்ரீன்ஷாட்கள் இணையத்தில், அதிகம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதே போல, ஸ்டுவர்ட் பிராட் பற்றி, ஆண்டர்சனும் பாலியல் ரீதியாக ட்வீட் ஒன்றை முன்பு செய்திருந்தார். இந்த ட்வீட்கள் காரணமாக, பட்லர், ஆண்டர்சன் மற்றும் மோர்கன் ஆகியோர் மீது, இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.


கிரிக்கெட் வட்டாரத்தில், இங்கிலாந்து அணி வீரர்களின் செயல்பாடுகள் கடும் பரபரப்பைக் கிளப்பி வரும் நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரரன் மைக்கேல் வாகன், இங்கிலாந்து வீரர்களுக்கு ஆதரவாக ட்வீட் ஒன்றைச் செய்துள்ளார்.

இதில், 'மோர்கன், பட்லர் மற்றும் ஆண்டர்சன் ஆகியோர் ட்வீட் செய்த சமயத்தில், யாரது மனதும் புண்பட்டதாக தெரியவில்லை. ஆனால், சில வருடங்கள் கழித்து, இப்போது அந்த ட்வீட்கள் எல்லாம், எப்படி மனது புண்படும் படி அமைந்துள்ளது என்பது தான் ஆச்சரியமாக உள்ளது. இது முற்றிலும் அபத்தமானது. இந்த மோசமான வேட்டையை உடனடியாக நிறுத்த வேண்டும்' என வாகன் குறிப்பிட்டுள்ளார்.

 

வாகனின் இந்த ட்வீட்டிற்கு, நெட்டிசன்கள் பலரும் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்