‘இதை மட்டும் மனசுல வச்சிக்கோங்க’!.. டி20 உலகக்கோப்பை வாய்ப்பு.. இளம் வீரர்களுக்கு ‘டிராவிட்’ சொன்ன முக்கிய அட்வைஸ்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ராகுல் டிராவிட், இளம் வீரர்களுக்கு முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்திய அணி வரும் ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளது. இதுல், ஒருநாள் தொடர் வரும் 13, 16, 18 ஆகிய தேதிகளிலும், டி20 வரும் 21, 23, 25 ஆகிய தேதிகளிலும் கொழும்பில் நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதனால் இலங்கை தொடரில் ஷிகர் தவான் தலைமையிலான 20 பேர் கொண்ட இந்திய அணி விளையாடும் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது.

இத்தொடருக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இலங்கை கிளம்புவதற்கு முன்பு கேப்டன் ஷிகர் தவான் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ராகுல் டிராவிட், ‘சீனியர் வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் அடங்கிய கலவையாக இருக்கும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்படபோவது சிறந்த அனுபவமாக இருக்கும். கிரிக்கெட் வீரராக மட்டுமில்லாமல், ஒரு பயிற்சியாளராகவும் ஒவ்வொரு அனுபவத்தில் இருந்தும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். நான் யார் என்றும் கிரிக்கெட் என்றால் என்னவென்றும் தெரிந்து கொள்ள மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு என்னுடைய திறமையை வளர்த்துக் கொள்வேன்’ என அவர் பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய ராகுல் டிராவிட், ‘ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல் போன்ற இளம் வீரர்கள் இந்த தொடரில் சிறப்பாக விளையாட ஆர்வமாக உள்ளனர். டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வுக்குழுதான் முடிவு செய்யும். அது அவர்களுடைய வேலை. அதைப்பற்றி நினைக்காமல் இந்த தொடரில் கவனம் செலுத்த வேண்டும். சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் தேர்வுக்குழு நிச்சயமாக உங்களை கவனிக்க ஆரம்பத்துவிடும். அதை மட்டுமே மனதில் வைத்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு தொடரும் ஒரு இளம் வீரருக்கு இறுதி தொடராக அமைந்து விடாது. இந்த தொடரும் அதுபோலதான்’ என இளம் வீரர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்