‘டீம் எல்லாம் ஓகேதான்’.. ஆனா இப்போ ‘இதுதான்’ பெரிய பிரச்சனையா இருக்கு.. சிஎஸ்கே சிஇஓ ஓபன்டாக்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் உள்ள பிரச்சனை குறித்து சிஎஸ்கே சிஇஓ பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற 14-வது சீசன் ஐபிஎல் தொடர் கொரோனா பரவல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. மொத்தம் 60 போட்டிகள் கொண்ட இந்த தொடரில், 29 போட்டிகளே முடிவடைந்துள்ளன. ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் இன்னும் தீவிரமாக இருப்பதால், எஞ்சிய 31 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது.

அதன்படி வரும் செப்டம்பர் மாதம் 19-ம் தேதி முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் பிசிசிஐ மும்முறமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரத்துக்கு செல்வதில் உள்ள பிரச்சனை குறித்து சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து InsideSport ஊடகத்துக்கு பேட்டியளித்த அவர், ‘வழக்கம்போல் இந்த ஆண்டும் சிஎஸ்கே அணி பலமாகவே உள்ளது. ஆனால் ஐக்கிய அரபு அமீரத்துக்கு வரும் ஜூலை 21-ம் தேதி வரை சர்வதேச விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதான் எங்களுக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது. ஏனென்றால், அனைத்து அணிகளும் முன்கூட்டியே சென்று ஹோட்டல்களை புக் செய்ய வேண்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், வீரர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தயாராக வேண்டும். ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சர்வதேச விமான சேவை தடையால், அனைத்து வேலைகளும் தாமதம் ஆகியுள்ளது’ என காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதனால் முதல்முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து சிஎஸ்கே அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், சென்னை அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி, 5-ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்