‘ஐபிஎல் சூதாட்ட புகாரில் இருவர் கைது’!.. கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பிய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு ஐபிஎல் தொடரில் சூதாட்ட நபர்கள் மைதானத்துக்குள் நுழைய உதவியதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர் கொரோனா பரவல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. மொத்தம் 60 போட்டிகள் கொண்ட தொடரில் 29 போட்டிகள் மட்டுமே நடைபெற்றன. அதனால் எஞ்சிய 31 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் கடந்த மே மாதம் 2-ம் தேதி நடந்த போட்டியின்போது சூதாட்ட தரகர்கள் இரண்டு பேர் மைதானத்துக்குள் நுழைய சிறப்பு பாஸ் ஏற்பாடு செய்து கொடுத்ததாக, டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் (DDCA) பியூன் பாலம் சிங் மற்றும் வீரேந்தர் சிங் ஷா ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மனிஷ் கன்சல் மற்றும் க்ரிஷன் கார்க் ஆகிய இரு நபர்களுக்கு ஐபிஎல் போட்டியை பார்க்க அனுமதிக்கும் அங்கீகார கார்டுகள் (Accreditation cards) வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையேயான போட்டி குறித்த தகவல்களை பகிர்ந்ததற்காக ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் ரோஹன் ஜெட்லி The Indian Express ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ‘சம்பந்தப்பட்ட நபர் ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதில் யார் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக போலீசார் நடத்தி வரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கப்படும்’ என தெரிவித்துள்ளார். எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்த தீவிரமாக வேலைகள் நடந்து வரும் நிலையில், ஐபிஎல் சூதாட்டத்துக்கு உதவியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்