‘எப்படி இது நடந்தது..?’ RRvSRH போட்டியின் போது நடந்த அதிர்ச்சி.. இரண்டு பேரை கைது செய்த போலீசார்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் சட்டவிரோதமாக நுழைந்த இருவரை போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2-ம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ராஜஸ்தான் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதில் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் 124 ரன்கள் அடித்து அசத்தி இருந்தார்.

இந்த நிலையில் இந்த போட்டியைக் காண இருவர் சட்டவிரோதமாக மைதானத்துக்கு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் ஸ்வரூப் நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் கார்க், ஜலந்தர் பகுதியைச் சேர்ந்த மனிஷ் கன்சல் என்ற இருவர் போலியான அனுமதி அட்டையைக் காண்பித்து மைதானத்துக்குள் நுழைந்துள்ளனர். அப்போது கண்காணிப்பு பணியில் இருந்த போலீசார் இவர்களை கவனித்துள்ளனர்.

இதனை அடுத்து அவர்கள் இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனால் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் இருவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை 5 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருவதாக ANI செய்தி வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சட்டவிரோதமாக இருவர் மைதானத்துக்குள் நுழைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்