‘மனுசன் நொறுங்கியே போய்ட்டாரு’!.. அந்த பால் ‘அப்படி’ வரும்னு கொஞ்சம்கூட நெனச்சிருக்க மாட்டாரு.. சிஎஸ்கே ரசிகர்களையும் ‘உருக’ வைத்த போட்டோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் அவுட்டானதும் சோகமாக கேலரியில் அமர்ந்த கொல்கத்தா வீரர் ரசலின் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடப்பு ஐபிஎல் தொடரின் 15-வது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 220 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக டு பிளசிஸ் 95 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 64 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து 221 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி கொல்கத்தா அணி விளையாடியது. ஆனால் ஆரம்பமே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் டக் அவுட்டாகி வெளியேற, அவரை தொடர்ந்து நிதிஷ் ரானாவும் 9 ரன்னில் அவுட்டாகினார். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திருப்பதி 8 ரன்னிலும், கேப்டன் இயான் மோர்கன் 7 ரன்னிலும், சுனில் நரேன் 4 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட்டாகினார்.

இதனால் 31 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை கொல்கத்தா அணி இழந்தது. பரிதாப நிலையில் அணி இருந்தபோது ஆண்ட்ரே ரசல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்தனர். இதில் யாரும் எதிர்பார்க்காத ஒரு அதிரடி ஆட்டத்தை ரசல் ஆட ஆரம்பித்தார். தான் எதிர்கொண்ட முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விளாசி சென்னை அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதனை அடுத்து ஷர்துல் தாகூர் வீசிய 10-வது ஓவரில் 3 சிக்சர்கள், 1 பவுண்டரிகளை விளாசி தள்ளினார்.

ரசலின் அதிரடி ஆட்டத்தால் மிரண்டுபோன சென்னை அணி, அவரை அவுட்டாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. முதல் பாதி வரை கொல்கத்தா அணி தோல்வி பெற போகிறது என நினைத்த ரசிகர்கள், இரண்டாம் பாதியில் ரசலின் ஆட்டத்தைப் பார்த்தபின் நிச்சயம் மனதை மாற்றி இருப்பார்கள்.

இந்த சமயத்தில் 12-வது ஓவரை சாம் கர்ரன் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை சிங்கிள் அடித்த தினேஷ் கார்த்திக், ரசலிக்கு ஸ்ட்ரைக்கை கொடுத்தார். அப்போது சாம் கர்ரன் வீசிய 2-வது பந்தை, லெக் சைடு ஒய்டாக செல்லும் என நினைத்த ரசல், அதை அடிக்காமல் சற்று முன்னே நகர்ந்தார். ஆனால் பந்து நேராக ஸ்டம்பில் பட்டு போல்டானது.

இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத ரசல் சோகத்தின் உச்சிக்கே சென்றார். இதனால் பெவிலியன் திரும்பியதும் டிரெஸ்ஸிங் ரூமுக்குள் செல்லாமல், கேலரி படிக்கட்டிலேயே சோகமாக அமர்ந்துவிட்டார். 7-வது வீரராக களமிறங்கிய ரசல், 22 பந்துகளில் 54 ரன்கள் (6 சிக்சர்கள், 3 பவுண்டரிகள்) அடித்து அசத்தி இருந்தார்.

இதனை அடுத்து களமிறங்கிய பேட் கம்மின்ஸ், ரசல் பாதியில் விட்டதை அவர் தொடர்ந்தார். சாம் கர்ரன் வீசிய 16-வது ஓவரில் 4 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் விளாசி போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார். கடைசி ஓவரில் 20 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில், கொல்கத்தா அணி இருந்தது. ஆனால் கடைசி ஓவரின் முதல் பந்திலேயே பிரஷித் கிருஷ்ணா ரன் அவுட்டாக, 18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றியை நழுவவிட்டது.

இந்த நிலையில் சென்னை அணி வெற்றி பெற்றாலும், கொல்கத்தா அணி வீரர்கள் வெற்றி பெற கடைசி வரை போராடிய விதம் கிரிக்கெட் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. அதேபோல், மேட்சை கடைசி வரை முடித்துக்கொடுக்க முடியாத சோகத்தில், கேலரியில் அமர்ந்திருந்த ரசலின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி சிஎஸ்கே ரசிகர்களையும் உருக வைத்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்