‘அவரை ஓய்வு பெற சொல்லுங்க’!.. மோசமான ஆட்டம்.. இந்திய சீனியர் வீரருக்கு எதிராக ‘போர்க்கொடி’ தூக்கும் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து இந்திய அணியை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 217 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து விளையாடிய நியூஸிலாந்து அணி 249 ரன்கள் எடுத்து 32 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனால் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

இந்த சூழலில் 5-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 64 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்திருந்தது. அப்போது கேப்டன் விராட் கோலி மற்றும் புஜாரா களத்தில் இருந்தனர். இதனை அடுத்து கடைசி நாளான நேற்றைய ரிசர்வ்டே ஆட்டத்தில் இவர்கள் இருவர் மீதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஆனால் நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கெயில் ஜேமிசனின் ஓவரில், விராட் கோலி 13 ரன்களிலும், புஜாரா 15 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். இதனை அடுத்து வந்த துணைக்கேப்டன் ரஹானே 15 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இந்த சமயத்தில் பொறுப்பாக விளையாடிய ரிஷப் பந்த் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, 170 ரன்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனை அடுத்து விளையாடிய நியூஸிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை நியூஸிலாந்து அணி தட்டிச்சென்றது. இதில் அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 52 ரன்களும், ராஸ் டெய்லர் 47 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில் இந்திய வீரர் புஜாராவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்திய டெஸ்ட் அணியில் சீனியர் வீரராக இருந்து வரும் புஜாரா, சிறப்பாக செயல்பட்டு நீண்ட பார்ட்னர்ஷிப் அமைக்கக்கூடியவர். ஆனால் கடந்த சில போட்டிகளில் அவரின் ஆட்டம் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கும்படியாக இல்லை.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் அவரது ஆட்டம் மோசமாகவே இருந்தது. முதல் இன்னிங்ஸில் 8 ரன்னும், 2-வது இன்னிங்ஸில் 15 ரன்களும்தான் புஜாரா எடுத்தார். இதனால் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும் கேப்டன் விராட் கோலியின் மோசமான ஆட்டமும் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்