‘இதனாலதாங்க அவர் லெஜெண்ட்’.. திடீரென இலங்கை கேப்டனை கூப்பிட்ட டிராவிட்.. இலங்கை ரசிகர்களையும் ‘நெகிழ’ வைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின்போது ராகுல் டிராவிட் செய்த செயல் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது திடீரென மழை குறுக்கிட்டதால், போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. நீண்ட நேரமாக மழை பெய்ததால், போட்டி 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக பிரித்வி ஷா 49 ரன்களும், சஞ்சு சாம்சன் 46 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 40 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணி 39 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆனாலும் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இப்போட்டியில் இலங்கை அணியைப் பொறுத்தவரை ஆவிஷ்கா ஃபெர்னாண்டோ 76 ரன்களும், பனுகா ராஜபக்சே 65 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில், இலங்கை அணியின் கேப்டன் தாசுன் ஷானகாவுடன் ராகுல் டிராவிட் பேசிய போட்டோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டதால், போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.

அப்போது இலங்கை அணியின் கேப்டன் தாசுன் ஷானகாவை அழைத்த இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், மைதானத்தில் நீண்ட நேரமாக அவருடன் பேசினார். நெருக்கடியான சமயத்தில் பயப்படாமல் நிதானமாக செயல்பட வேண்டும் என டிராவிட் அறிவுரை வழங்கினார். இதன் விளைவாக போட்டியின் இரண்டாம் பாதியில் இலங்கை வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணியை ஆல் அவுட் செய்தனர்.

எதிரணியைச் சேர்ந்த கேப்டனாக இருந்தாலும், அவரை அழைத்து ராகுல் டிராவிட் அறிவுரை வழங்கியது இலங்கை ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவுக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரின் மூலம் லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டுக்கான இலங்கை அணிக்கு தாசுன் ஷானகா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்