'இறுதி விநாடி வரை டஃப் கொடுத்த இந்திய அணி'!.. 'அரண்டு போன அர்ஜெண்டினா'!.. ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி அரையிறுதியில் நடந்தது என்ன?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி கடந்து வந்த பாதை அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 3 பதக்கங்களை வென்றுள்ளது. மீராபாய் சானு, பி.வி.சிந்து, லாவ்லினா, ஆகியோர் பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளனர். மல்யுத்த வீரர் ரவிக்குமார் வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்துள்ளார். 

இந்நிலையில், இந்தியாவுக்கு 5வது பதக்கத்தை உறுதி செய்யக்கூடிய போட்டியாக இன்று மகளிர் ஹாக்கி அரையிறுதி சுற்று நடைபெற்றது.

டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் குரூப் ஏ-வில் இடம்பெற்றிருந்த இந்திய மகளிர் ஹாக்கி அணி முதலில் சறுக்கலையே சந்தித்தது. லீக் சுற்றின் முதல் 3 போட்டிகளிலுமே மோசமான தோல்விகளைப் பெற்று ஏமாற்றம் அளித்தது. இதனால் இந்த ஒலிம்பிக்கில் மகளிர் ஹாக்கியின் ஆட்டம் கிட்டதட்ட முடிந்திவிட்டது என்று தான் பலர் நினைத்தனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத அசுரத்தனமான கம்பேக் கொடுத்தது இந்திய அணி.

முதல் 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்த போதும் 4வது லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி ஆச்சரியம் கொடுத்தது. பின்னர், புள்ளிக்கணக்குகளின் படி இந்திய அணி ஒரே ஒரு வெற்றி பெற்றிருந்த போதும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. அப்போதும் அதிர்ஷ்டத்தால் காலிறுதிக்கு முன்னேறியது என பலரும் விமர்சனம் செய்தனர்.

ஆனால், காலிறுதிப்போட்டியில் தான் இந்திய மகளிர் அணியின் உண்மையான பலம் தெரியவந்தது. காலிறுதி ஆட்டத்தில் உலக மகளிர் ஹாக்கி தர வரிசையில் 2-வது இடத்தில் இருந்த பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியினரை ஒரு கோல் கூட போட விடாமல் இந்திய அணி தடுத்தது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்திய அணிக்கான அரையிறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி, பலம் வாய்ந்த அர்ஜெண்டினாவை எதிர்த்து மோதியது. காலிறுதிப்போட்டியில் காட்டிய அதே ஆக்ரோஷத்தை அரையிறுதியிலும் காட்டி, இந்திய அணி தொடகக்திலேயே மிரளவைத்தது. இரு அணிகளும் விடாப்பிடியாக மோதிக்கொண்டிருந்த நேரத்தில் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் அபாரமாக கோல் அடித்து 1 - 0 என முன்னிலை பெற வைத்தார்.

குர்ஜித் அடித்த கோல் தான் கடந்த போட்டியில் இந்தியா வெல்ல உதவியாக இருந்தது. இன்றும் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே குர்ஜித் கோல் அடித்து அசத்தினார். பிறகு, போட்டியின் எட்டாவது நிமிடத்தில் அர்ஜென்டினாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதனைப் பயன்படுத்தி கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது அர்ஜென்டினா. இந்தியாவின் கீப்பர் சவிதா சிறப்பாக செயல்பட்டு பெனால்டி கார்னர் ஷாட்டை தடுத்தார். இதன் பின்னர் இந்திய பெண்கள் ஹாக்கி டிபன்ஸ் அபாரமாக இருந்ததால் முதல் கோலை அடிக்க முடியாமல் அர்ஜென்டினா திணறி வந்தது.

பின்னர் கிடைத்த 3வது பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட அர்ஜெண்டினா கோல் அடித்து 1 - 1 என சமநிலை படுத்திக்கொண்டது. இதனால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக நகரத்தொடங்கியது . எந்த தரப்பில் இருந்து கோல் வரும் என்று தெரியாதவாறு இரு அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு கோல் போட முனைப்பு காட்டின. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 1 - 1 என சமநிலை ஆனது.

நம்பிக்கையுடன் 2வது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலம் கோல் அடித்து 2 - 1 என அர்ஜெண்டினா அணி முன்னிலை பெற்றது . இதன் பின்னர் கோல் அடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட இந்திய அணி கடைசி வரை போராடியும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் இறுதியில் 2 - 1 என்ற கணக்கில் அர்ஜெண்டினாவிடம் இந்திய அணி வீழ்ந்தது. இறுதிச்சுற்றுக்கு செல்லும் வாய்ப்பையும் தவறவிட்டது.

ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல் முறையாக அரையிறுதி சுற்று வரை முன்னேறி வந்துள்ளது. இறுதி சுற்றுக்கும் முன்னேறும் என எதிர்பார்த்த நிலையில் அது நிறைவேறவில்லை. எனினும், கடைசி வரை போராடிய இந்திய அணிக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்