'எதுவும் முடிஞ்சு போயிடல்ல!.. இனிமே தான் ஆட்டம் இருக்கு'!.. தோல்வி அடைந்தாலும்... இந்தியாவை தலை நிமிர வைத்த பவானி தேவி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் தமிழ்நாட்டின் பவானி தேவி செய்துள்ள ஒரு சம்பவம் வருங்காலத்தில் இந்திய பெண்களுக்கு மிகப்பெரும் பாதையை அமைத்துக் கொடுத்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் 2020 தொடரில் நான்காம் நாளான இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள். டேபிள் டென்னிஸ், வில்வித்தை, டென்னிஸ் என்று பல்வேறு பிரிவுகளில் இன்று போட்டி நடக்க உள்ளது. இந்த நிலையில் இன்று (26.7.2021) காலையிலேயே முதல் ஆட்டமாக வாள்வீச்சு பிரிவில் இந்திய வீராங்கனை பவானி தேவி கலந்து கொண்டார்.

பவானி தேவி தமிழ்நாட்டை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை ஆவார். இவரின் பூர்வீகம் சென்னை ஆகும். இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கு வாள்வீச்சு பெண்கள் பிரிவில் யாரும் தேர்வானது இல்லை என்ற மோசமான வரலாற்றை இவர் முறியடித்து சாதனை படைத்துள்ளார். உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் நன்றாக ஆடியதால் இவருக்கு ஒலிம்பிக் வாய்ப்பு கிடைத்தது. 

இந்த நிலையில், இன்று வாள்வீச்சு பெண்கள் பிரிவில் 64 சுற்று ஆட்டத்தில் கலந்து கொண்டார். அதாவது இந்த ஆட்டத்தில் 64 பேர் மோதுவார்கள். இதில் வெற்றிபெறும் 32 பேர் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். துனிஷியா வீராங்கனை நதியா பென் அசிசை இந்த 64 சுற்று ஆட்டத்தில் பவானி தேவி எதிர்கொண்டார். 

இந்த முதல் சுற்றானது சிறிது கடினமான ஆட்டம் ஆகும். இந்த சுற்றில் உடலில் எங்கு வேண்டுமானாலும் வாள் மூலம் குத்த முடியும். வயிற்றுக்கு மேல்பகுதியில் மட்டுமே குத்த வேண்டும். அந்த வகையில், முதல் 15 புள்ளிகள் எடுக்கும் நபர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். 

இதன் மூலம் மொத்தமாக 15-3 என்ற புள்ளிகள் கணக்கில் பவானி தேவி அடுத்த சுற்றுக்கு (32 பேர் பங்கேற்கும் சுற்று) முன்னேறினார். பிரான்சின் மனோன் ப்ருநட்டை இவர் அடுத்த சுற்றில் எதிர்கொண்டார்.  

முன்னதாக, பவானி தேவி தன்னுடைய முதல் போட்டியில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினார். முதல் எட்டு புள்ளிகள் வரை பவானி தேவி கட்டுப்பாட்டில்தான் முழு போட்டியும் இருந்தது. பவானி தேவி 9வது புள்ளி எடுத்த போதுதான் நதியா பென் அசிஸ் தனது முதல் புள்ளியை பெற்றார். 

ஆனால், ஃபிரான்சின் மனோன் ப்ருநட் உலகின் நம்பர் 3 வீராங்கனை ஆவார். அவர் தொடக்கத்தில் இருந்தே பவானி தேவியை எதிர்பாராத இடங்களில் அட்டாக் செய்து அதிர்ச்சி கொடுத்தார். முதல் 11 புள்ளிகள் வரை பவானி தேவி எதுவும் செய்ய முடியாமல் திணறிப்போனார். 

அதன்பின் புள்ளிகள் எடுக்க தொடங்கிய பவானி தேவி வேகமாக 7 புள்ளிகள் வரை வந்தார். ஆனால் இன்னொரு பக்கம் பிரான்சின் மனோன் ப்ருநட் 15 புள்ளிகளை எடுத்தார். முதலில் 15 எடுப்பவர்தான் வெற்றிபெற்றவர் என்பதால் பவானி தேவியை வீழ்த்தி மனோன் ப்ருநட் வெற்றிபெற்றார்.

பவானி தேவி தோல்வியைத் தழுவினாலும் மகத்தான ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் வாள்வீச்சுப் பிரிவில் பெண்கள் யாரும் இதுவரை பங்கேற்றதில்லை என்ற மோசமான நிலையை தகர்த்து, வருங்கால இந்திய வீராங்கனைகளுக்கு ஒரு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் புது வெளிச்சம் பாய்ச்சியுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்