"அந்த ஒன்றரை 'வருசம்'.. ஒழுங்கா ஒரு நாள் கூட என்னால தூங்க முடியல.." 'ஜடேஜா' வாழ்வில் வந்த 'சோதனை'.. "அவருக்குள்ள இப்படி ஒரு சோகமா?!"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்தை சந்திக்கவுள்ள இந்திய அணி, இதற்காக தற்போதே தயாராகி வருகிறது.

தற்போது பிசிசிஐ-யின் பயோ பபுளில் இருக்கும் இந்திய அணி, ஜூன் மாதம் 2 ஆம் தேதி, இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது. ஜூன் 18 ஆம் தேதி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெறவுள்ள நிலையில், இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி பங்கேற்கிறது.

இந்த இரு தொடர்களுக்கான இந்திய அணியில் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) இடம்பெற்றுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில், இந்திய அணியின் சூழல் காம்போவிற்கு ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோரை களமிறக்க வேண்டும் என பல கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கு காரணம், இவர்கள் இருவரின் சமீபத்திய ஆட்டத்திறன் தான்.

அதிலும் குறிப்பாக, பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் இந்திய அணியின் அசைக்க முடியாத ஆல் ரவுண்டராக ஜடேஜா வலம் வருகிறார். சமீப காலமாக, இந்திய அணியின் முக்கிய வீரராக ஜடேஜா உருவெடுத்து வந்தாலும், 2018 ஆம் ஆண்டிற்கு முந்தைய கால கட்டம், அவருக்கு மிகவும் மோசமானதாக இருந்தது. அந்த சமயத்தில், இந்திய அணியில் கூட ஜடேஜாவிற்கு அதிகமாக வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில், இந்திய அணியில் இடம் கிடைக்காத சமயத்தில் தனது மனநிலை எப்படி இருந்தது என்பது பற்றி, தற்போது ஜடேஜா தெரிவித்துள்ளார். 'உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அந்த ஒன்றரை ஆண்டுகள், எனது வாழ்வில் மிகவும் மோசமான நாட்கள். என்னால் ஒரு நாள் கூட நிம்மதியாக தூங்க முடியவில்லை. அந்த சமயத்தில், அதிகாலை 4 முதல் 5 மணி வரை விழித்திருப்பேன். மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்றால், நான் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி யோசித்துக் கொண்டே இருப்பேன்.

நான் உறங்கும் நிலையில் தான் இருப்பேன். ஆனால், எனக்கு தூக்கம் வராது. அப்போது, டெஸ்ட், ஒரு நாள் போட்டியின் இந்திய அணியில் நான் இடம்பெறுவேன். ஆனால், பிளேயிங் 11 இல் வாய்ப்பு கிடைக்காது. சர்வதேச போட்டிகளுக்காக அணியில் இருப்பதால், என்னால் உள்ளூர் போட்டிகளிலும் ஆட முடியவில்லை. எனது திறமையை நிரூபிக்கவும் வாய்ப்பு கிடைக்காமல் தவித்தேன்.
 

அதன் பிறகு, ஓவல் மைதானத்தில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடியது தான், எனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் மாற்றியது. இங்கிலாந்து ஆடுகளங்களில், சிறந்த பந்து வீச்சை எதிர்த்து ஆடும் போது, உலகில் எந்த மைதானத்தில் வேண்டுமானாலும் இனி சிறப்பாக ஆடலாம் என்ற நம்பிக்கையை உங்களுக்குள் ஏற்படுத்தும்.

தொடர்ந்து, ஹர்திக் பாண்டியா காயத்தால் அவதிப்பட்டதால், ஒரு நாள் போட்டிகளிலும் கம்பேக் கொடுக்க வாய்ப்பு கிடைத்தது' என ஜடேஜா தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்