என்னங்க சொல்றீங்க.. இவருக்கா இந்த நிலைமை..! கரும்புள்ளியாக மாறிய ‘சேவாக்’ விவகாரம்.. முன்னாள் ‘சிஎஸ்கே’ வீரரின் பரிதாப நிலை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பேருந்து டிரைவாக வேலை பார்த்து வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சுராஜ் ரன்தீவ் (Suraj Randiv), அந்நாட்டு அணிக்காக 2009 முதல் 2016-ம் ஆண்டு வரை விளையாடியுள்ளார். 36 வயதான இவர், இலங்கை அணிக்காக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 43 விக்கெட்டுகளும் 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 36 விக்கெட்டுகளும், 20 டி20 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

சுழற்பந்து வீச்சாளரான சுராஜ் ரன்தீவ், கடந்த 2011-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணியில் விளையாடியுள்ளார். அதேபோல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2011-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை விளையாடியுள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா விளையாடியது. அப்போது சேவாக் 99 ரன்கள் எடுத்திருந்தபோது, இந்திய அணியின் வெற்றிக்கு 1 ரன் மட்டுமே தேவைப்பட்டது. அந்த சமயம் பந்துவீசிய சுராஜ் ரன்தீவ், அதை நோ பாலாக வீசி போட்டியை முடித்து வைத்தார். இந்த விவகாரம் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ஒரு போட்டியில் சுராஜ் ரன்தீவ் விளையாட தடை விதிக்கப்பட்டது. இது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் கரும்புள்ளியாக அமைந்தது.

தற்போது ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த அவர், மெல்போர்ன் நகரில் பேருந்து டிரைவராக பணியாற்றி வருகிறார். வாழ்வாதாரத்துக்காக இந்த வேலையை செய்து வருவதாக சுராஜ் ரன்தீவ் தெரிவித்துள்ளார். இந்த வேலை நேரம் போக ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட் கிளப்பில் அவர் விளையாடி வருகிறார்.

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, வலைப்பயிற்சியில் பந்துவீச ஆஸ்திரேலிய அணி அவரை அழைத்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வீரர் பேருந்து டிரைவராக பணியாற்றி வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவரைப் போலவே ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெடிங்டன் வாயொங்கா, இலங்கை அணியின் முன்னாள் வீரர் சிந்தக நமஸ்தே ஆகியோர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பேருந்து டிரைவராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்