இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்..? திடீரென ‘சூடு’ பிடிக்கும் விவாதம்.. முன்னாள் வீரர் ‘சூசகமாக’ சொன்ன தகவல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணிக்கு அடுத்த பயிற்சியாளர் நியமிக்கப்படுவது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய ஏ அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதில் இருந்து, இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் குறித்த விவாதம் தொடங்கிவிட்டது. தற்போது அந்த விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அதற்கு காரணம் இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ராகுல் டிராவிட் எடுத்த சில முடிவுகள்தான்.

இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்து ஆட்டமிழந்தனர். அதனால் பேட்டிங் ஆர்டரில் டிராவிட் சில மாற்றம் செய்தார். அதன்படி 8-வது ஆர்டரில் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக தீபக் சஹாரை களமிறக்கி, அணியின் வெற்றிக்கு முக்கிய வியூகம் அமைத்திருந்தார்.

அதேபோல் போட்டியின் 45-வது ஓவரின்போது தீபக் சஹார் தடுமாறியதும், உடனே தீபக் சஹாரின் சகோதரர் ராகுல் சஹாரிடம் சில அறிவுரைகளை சொல்லி அனுப்பினார். இதன்பின்னர் தீபக் சஹார் நிதானமாக விளையாடினார். இதன்காரணமாக இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதனால், இந்திய அணியின் நிரந்தர பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட வேண்டும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தற்போது இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் வரும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது. அடுத்த முறையும் அவர்தான் பயிற்சியாளராக இருப்பார் என சொல்லப்படுகிறது. ஆனால் அவரின் பயிற்சியில் இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லாததால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதனால் பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரியை எதிர்த்து ராகுல் டிராவிட் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘இந்திய அணிக்கான பயிற்சியாளர் போட்டியில் ராகுல் டிராவிட் கலந்துக்கொள்ள விரும்ப மாட்டார் என நினைக்கிறேன். அப்படி அவர் போட்டியிட்டால் ரவி சாஸ்திரி மற்றும் டிராவிட் இடையே கடும் போட்டி நிலவும். ஆனால் டிராவிட்டுக்கு அணி நிர்வாகம் முக்கியத்துவம் தரும் என கூற முடியாது. ரவி சாஸ்திரியே முதல் தேர்வாக இருப்பார்.

பயிற்சியாளருக்கான போட்டியில் டிராவிட் ஒருவேளை பங்கேற்கவில்லை என்றால், ரவி சாஸ்திரிதான் மீண்டும் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார். அவரை எதிர்த்து டிராவிட்டை தவிர வேறு யார் போட்டியிட்டாலும் வெற்றி பெற மாட்டார்கள். டி20 உலகக்கோப்பை முடிந்தப் பிறகு பயிற்சியாளர் பதவியில் மாற்றம் இருக்காது’ என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்