டிவியில் பார்த்து ‘தாய்’ ஆனந்த கண்ணீர்.. நெகிழ்ச்சியில் ஊர்க்காரர் சொன்ன ‘ஒரு’ வார்த்தை.. பாராட்டு மழையில் ‘யாக்கர் கிங்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியில் விளையாடும் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனை தொலைக்காட்சியில் பார்த்து அவரது தாய் ஆனந்தக் கண்ணீர்
வடித்தார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையான கடைசி ஒருநாள் போட்டி இன்று ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இந்திய அணிக்கான ப்ளேயிங் லெவனில் இடம்பிடித்திருந்தார். இது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடராஜன் விளையாடும் முதல் போட்டியாகும்.  ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்ததால், கடைசி போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடியது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 92 ரன்களும், ஜடேஜா 66 ரன்களும், கேப்டன் விராட் கோலி 63 ரன்களும் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் ஃபின்சும், மர்னஸ் லபுஷேனும் களமிறங்கினர். கடந்த இரண்டு போட்டிகளில் முதல் 25 ஓவர்கள் வரை ஆஸ்திரேலிய ஓப்பனர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறி வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆஸ்திரேலிய நட்சத்திர ஆட்டக்காரராக மர்னஸ் லபுஷேனின் விக்கெட்டை நடராஜன் வீழ்த்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் நடராஜன் வீழ்த்தும் முதல் விக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆஸ்திரேலிய அணி 289 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் விளையாடிய முதல் போட்டியிலேயே விக்கெட் எடுத்த நடராஜனுக்கு பலரும் சமூக வலைதளங்களில் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நடராஜன் விளையாடுவதை தொலைக்காட்சியில் பார்த்த அவரது தாய் ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார்.

இது குறித்து சின்னப்பம்பட்டியில் வசிப்பவர் ஒருவர் கூறுகையில், ‘சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி என்கிற சிறிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நடராஜன், தற்போது வெளிநாட்டில் சென்று விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவரால்தான் இந்த ஊருக்கே பெருமை. இன்னும் சில விக்கெட்டுகளை வீழ்த்தி, நடராஜனால் இந்த போட்டியில் இந்தியா வெற்றி அடைந்தால் மிகவும் மகிழ்ச்சி’ என அவர் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்