"அவுட் குடுக்குறப்போ கண்ண மூடிட்டு தான் இருப்பீங்களா??..." மூன்றாம் நடுவரின் 'சர்ச்சை' முடிவு... கொந்தளித்த முன்னாள் 'வீரர்கள்'!! - வீடியோ

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையேயான நான்காவது டி 20 போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்துள்ளது.

தொடர்ந்து இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி ஆடி வரும் நிலையில், இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் அவுட்டான விதம் அதிகம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. முன்னதாக, பல ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு, சூர்யகுமார் யாதவிற்கு, இரண்டாவது டி 20 போட்டியில் வாய்ப்பு கிடைத்திருந்தது. ஆனால், பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து, இன்றைய போட்டியில் பேட்டிங் களமிறங்கிய சூர்யகுமார், முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து தனது சர்வதேச பயணத்தை ஆரம்பித்தார். தொடர்ந்து, நாலா பக்கமும் பந்துகளை பவுண்டரிகள் அடித்து விரட்ட, முதல் சர்வதேச டி 20 போட்டியிலேயே அரை சதமடித்து அசத்தினார்.

இந்நிலையில், சாம் குர்ரான் பந்து வீச்சில், அவர் அடித்த ஷாட், டேவிட் மலானின் கைக்குச் சென்றது. மலான் பந்தை கீழே வைத்தது போல தெரிந்த நிலையில், முடிவு மூன்றாம் நடுவருக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, ரீப்ளேயில் பந்து தரையில் படுவது போல தெரிந்த நிலையில், அவுட்டில்லை என ரசிகர்கள் உட்பட அனைவரும் நினைத்தனர்.



ஆனால், மூன்றாம் நடுவர் அவுட் என அறிவித்தது, அனைவரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 14 ஆவது ஓவரில் சூர்யகுமார் அவுட்டான நிலையில், அவர் களத்தில் இறுதி வரை நின்றிருந்தால், அறிமுக போட்டியில் சதமடிக்கும் வாய்ப்பை கூட அவர் பெற்றிருக்கலாம். ஆனால், நடுவரின் தவறான முடிவால், அவர் நடையைக் கட்டினார்.

இந்நிலையில், சூர்யகுமாரின் சர்ச்சை விக்கெட்டை, சேவாக், வாசிம் ஜாஃபர் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்பி ட்வீட் செய்து வருகின்றனர்.









 

 







 


சேவாக் தனது ட்வீட்டில், 'மூன்றாம் நடுவர் இந்த முடிவை அறிவிக்கும் போது, இப்படி தான் இருந்திருப்பார்' என கண்ணைக் கட்டிக் கொண்டு சிறுவன் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதே போல, விவிஎஸ் லட்சுமண், தனிஷ் கனேரியா உள்ளிட்ட பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்