‘ஐபிஎல் வரலாற்றில் மறக்க முடியாத மோதல்’!.. ஏன் அன்னைக்கு ‘கோலி’ அப்படி கோவப்பட்டார்..? முதல்முறையாக மனம் திறந்த சூர்யகுமார்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது விராட் கோலியுடன் ஏற்பட்ட மோதல் குறித்து சூர்யகுமார் யாதவ் முதல்முறையாக பகிர்ந்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. அந்த தொடரின் போட்டி ஒன்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. அப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ், பெங்களூரு பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்துக்கொண்டு இருந்தார்.

இதனால் கோபமடைந்த கேப்டன் விராட் கோலி, சூர்யகுமார் யாதவை சீண்டும் விதமாக அவரின் அருகில் சென்று ஏதோ பேசினார். உடனே கோலியை, சூர்யகுமார் யாதவ் முறைத்துப் பார்த்தார். இந்த சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இதுகுறித்து தற்போது பேசிய சூர்யகுமார் யாதவ், ‘நான் என்று இல்லை. அந்த இடத்தில் எந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் கோலி அப்படித்தான் செய்திருப்பார். அந்தளவுக்கு அவர் ஆக்ரோஷமானவர். ஆனால் கோலி என்னை சீண்டியதற்கு நான் மகிழ்ச்சியடைந்தேன். ஏனென்றால் என்னுடைய விக்கெட் அப்போது பெங்களூரு அணிக்கு ரொம்ப முக்கியமானதாக இருந்தது. அதனால்தான் என்னை சீண்டி சீக்கிரம் அவுட்டாக்க கோலி முயற்சி செய்தார்’ என அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய சூர்யகுமார் யாதவ், ‘நான் எப்போதும் என் உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டேன். ஆனால் அன்றைக்கு நானும் கோபமடைந்தேன். ஆனால் போட்டிக்கு பின்பு, நான் சிறப்பாக விளையாடியதாக கோலி பாராட்டினார். அந்த சீண்டிய சம்பவம் குறித்து அவரிடம் பேசும்போது, இதெல்லாம் சகஜம்தான் எனக் கூறி உற்சாகமாகப் பேசினார்’ என சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.

அப்போட்டியில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், 43 பந்துகளில் 79 ரன்கள் அடித்து சூர்யகுமார் யாதவ் அசத்தினார். இதனால் மும்பை அணி வெற்றி பெற்றது. மேலும் சூர்யகுமார் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்