‘அஸ்வினுக்கு ஆதரவாக நாங்களும் வருவோம்ல’!.. சரியான நேரம் பார்த்து சர்ரே கிளப் போட்ட ட்வீட்.. ‘செம’ வைரல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் அஸ்வின் இடம்பெறாததை விமர்சிக்கும் விதமாக சர்ரே கிரிக்கெட் கிளப் பதிவிட்ட ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்துள்ளன. ஆனால் இதில் ஒரு போட்டியில் கூட சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மைதானம் சற்று சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால், அஸ்வின் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முகமது ஷமி மற்றும் இஷாந்த் ஷர்மாவுக்கு பதிலாக உமேஷ் யாதவ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய இரண்டு வீரர்கள் மட்டுமே மாற்று வீரர்களாக இடம்பெற்றனர்.

அப்போது இதுகுறித்து கேப்டன் விராட் கோலியிடம் வர்ணையாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு, இங்கிலாந்து அணி 4 இடதுகை பேட்ஸ்மேன்களுடன் களமிறங்குவதால், சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜாவை அணியில் எடுத்துள்ளதாக பதிலளித்தார். கோலியின் இந்த பதில் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு காரணம், சர்வதேச கிரிக்கெட்டில் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் அஸ்வின்தான்.

இதனிடையே நேற்றைய போட்டியின்போது டிரெஸ்ஸிங் ரூமிற்கு வெளியே அஸ்வின் சோகமாக அமர்ந்திருந்தார். இந்த போட்டோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. அதனால் பலரும் அஸ்வினுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய ப்ளேயிங் லெவனில் அஸ்வின் இடம்பெறாதது குறித்து சர்ரே கிரிக்கெட் கிளப் கிண்டலாக ட்வீட் செய்துள்ளது. கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடந்த கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே கிரிக்கெட் கிளப் சார்பாக அஸ்வின் விளையாடினார். அப்போது சோமர்செட் அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் எடுத்து அசத்தினார்.

தற்போது இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியும் ஓவல் மைதானத்தில்தான் நடைபெற்று வருகிறது. ஆனால் இப்போட்டியில் அஸ்வின் இடம்பெறததால், இந்திய அணியை கிண்டல் செய்யும் விதமாக அஸ்வின் எடுத்த 7 விக்கெட்டை குறிப்பிட்டு சர்ரே கிரிக்கெட் கிளப் ட்வீட் செய்துள்ளது. தற்போது இந்த ட்வீட் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்