VIDEO: ‘ஏன் எல்லாருக்கும் உங்கள பிடிக்குதுன்னு இப்பதான் தெரியுது’!.. வேகமாக வந்த ‘சின்ன தல’ செஞ்ச காரியம்.. எமோஷ்னல் ஆகி கட்டிப்பிடித்த வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் போது சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா செய்த செயல் இணையத்தில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 220 ரன்களை குவித்தது.

இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ருதுராய் கெய்க்வாட் 64 ரன்களும், டு பிளசிஸ் 95 ரன்களும் அடித்தனர். 3-வதாக களமிறங்கிய மொயின் அலி 12 பந்துகளில் (2 பவுண்டரி, 2 சிக்சர்) 25 ரன்கள் அடித்தார். இவர் அவுட்டான பின் சுரேஷ் ரெய்னா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென கேப்டன் தோனி களமிறங்கி சர்ப்ரைஸ் கொடுத்தார். முன்னதாக 7-வது வீரராக களமிறங்கி வந்த தோனி, 4-வது வீரராக பேட்டிங் செய்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

தோனியும் தன் பங்கிற்கு 2 பவுண்டரி, 1 சிக்சர் விளாசி 8 பந்துகளில் 17 ரன்கள் அடித்தார். இதனை அடுத்து களமிறங்கிய ஜடேஜா, போட்டியின் கடைசி பந்தில் சிக்சர் அடித்து அசத்தினார். கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை சுனில் நரேன், ஆண்ட்ரே ரசல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இதனை அடுத்து 221 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. ஆனால் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் டக் அவுட்டாகி வெளியேற, அவரை தொடர்ந்து நிதிஷ் ரானாவும் 9 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இவர்களை தொடர்ந்து வந்த ராகுல் திருப்பதி (8 ரன்கள்), கேப்டன் இயான் மோர்கன் (7 ரன்கள்), சுனில் நரேன் (4 ரன்கள்) என அடுத்தடுத்து சொற்ப ரன்னில் அவுட்டாகினர்.

இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக்-ஆண்ட்ரே ரசல் ஜோடி அதிரடியாக ஆட ஆரம்பித்தது. முதல் பாதி சிஎஸ்கே பக்கம் இருந்த ஆட்டம், இரண்டாம் பாதியில் மெல்ல மெல்ல கொல்கத்தா பக்கம் நகர்ந்தது. அப்போது சாம் கர்ரன் ஓவரில் ரசல் (22 பந்துகளில் 54 ரன்கள்) அவுட்டாகி வெளியேறினார்.

இதனை அடுத்து களமிறங்கிய பேட் கம்மின்ஸுடன் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்தி அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். 40 ரன்கள் எடுத்திருந்தபோது லுங்கி நிகிடி ஓவரில் எல்பிடபுள்யூ ஆகி தினேஷ் கார்த்திக் வெளியேற, ரன் அடிக்கும் பொறுப்பை பேட் கம்மின்ஸ் (34 பந்துகளில் 66 ரன்கள்) ஏற்றுக்கொண்டார். அதன்படி சிக்சர், பவுண்டரி என விளாச தள்ளினார். ஆனாலும் 19.1 ஓவர்களில் 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் கொல்கத்தா அணி இழந்தது. இதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் போட்டி ஆரம்பிக்கும் முன்னதாக, கொல்கத்தா அணி வீரர் ஹர்பஜன் சிங் சிஎஸ்கே வீரர்களுடன் மைதானத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுரேஷ் ரெய்னா, திடீரென ஹர்பஜன் சிங் காலில் விழுந்து வணங்கினார். இதை சற்றும் எதிர்பார்க்காத ஹர்பஜன் சிங் உணர்ச்சிவசப்பட்டு ரெய்னாவை கட்டித் தழுவினார். கடந்த ஐபிஎல் சீசனில் சென்னை அணியின் சார்பாக ஹர்பஜன் சிங் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள், ரெய்னாவின் இந்த பண்புதான் எல்லோருக்கும் அவரை பிடிக்க காரணம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்