‘கிளப்பில் நடந்த கைது சம்பவம்’... ‘வருத்தம் தெரிவித்து ரெய்னா அளித்த விளக்கம்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

முன்னாள் இந்திய அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா, இரவு விடுதியில் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.

மும்பையில் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் இன்னும் தொடர்ந்து அமலில் இருக்கின்றன. இதனால் இரவுநேர கிளப்புகள், மதுபான விடுதிகள் திறந்திருப்பதில் நேரக் கட்டுப்பாடு இருக்கிறது. இரவு 11 மணிக்கு மேல், அதிகாலை 6 மணி வரை திறக்க அனுமதியில்லை. இந்நிலையில் மும்பை விமான நிலையம் அருகே இருக்கும் டிராகன்ப்ளே எக்ஸ்பீரியன்ஸ் எனும் இரவு விடுதி வெகுநேரம் திறந்திருப்பதாக கிடைத்த தகவலால் நேற்று மும்பை போலீசார் திடீர் ரெய்டு நடத்தினர்.

இதில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, ஹ்ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சுசானே கான், பாடகர் குரு ராந்தவா உள்ளிட்ட 34 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 13 பெண்கள் இருந்ததால் அவர்களை போலீஸார் விடுவித்து நோட்டீஸ் அனுப்பினர். மீதம் இருந்த ஆண்கள் கைது செய்யப்பட்டு போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சுரேஷ் ரெய்னா தரப்பில் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, 'மும்பையில் ஒரு படப்பிடிப்புக்காக சுரேஷ் ரெய்னா சென்றிருந்தார். அந்தப் படப்பிடிப்பு முடிய இரவு நீண்டநேரம் ஆனது. ரெய்னா டெல்லிக்குப் புறப்படும் முன் அவரின் நண்பர்கள் சிலர் சிறிய விருந்தளிக்க முடிவு செய்ததால் இரவு விடுதிக்கு ரெய்னா சென்றார். மும்பையில் உள்ள நேரக் கட்டுப்பாடு, கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் ரெய்னாவுக்குத் தெரியாது.

இந்த விதிமுறைகள் குறித்துக் கூறியவுடன், உடனடியாக ரெய்னா அதற்கு ஒப்புக்கொண்டார். அதுமட்டுமல்லாமல் துரதிர்ஷ்டவசமாக , தற்செயலாக நடந்த சம்பவத்துக்கும் அதிகாரிகளிடம் ரெய்னா வருத்தம் தெரிவித்தார். ரெய்னா எப்போதும் அரசின் சட்டத்தையும் விதிமுறைகளையும் முறையாகக் கடைப்பிடிப்பவர். எதிர்காலத்திலும் தொடர்ந்து அதைப் பின்பற்றுவார்'  என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்