‘ஸ்கூல் பீஸ் கூட கட்ட முடியல’.. தவிக்கும் தமிழக கபடி வீராங்கனைகள்.. களத்தில் இறங்கிய ‘சின்ன தல’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தமிழக கபடி வீராங்கனைகளுக்கு உதவி வேண்டி சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா ட்வீட் செய்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த கபடி பயிற்சியாளர் சதீஷ், ‘கபடி தமிழகத்தின் மண் சார்ந்த விளையாட்டுகளில் ஒன்று. செங்கல்பட்டு, கூவத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த சிறுமிகள் இதை உயிர் மூச்சாக கொண்டு விளையாடி வருகின்றனர். அனைவரும் 13 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். கபடி விளையாட்டில் சாதிக்க வேண்டுமென்ற கனவுடன் இருக்கிறார்கள். கொரோனா ஊரடங்கினால் இவர்களது பெற்றோர்களின் வாழ்வாதாரம் முடங்கி போய்விட்டது. இதனால் பள்ளிக்கட்டணத்தை கூட கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.

தற்போது இவர்களுக்கு ஊக்கம் கொடுப்பது, காலை மற்றும் மாலை நேரங்களில் மேற்கொள்ளும் பயிற்சிதான். ஆனாலும் போதுமான நிதி வசதி இல்லாததால் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் நடைபெறும் கபடி போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை’ என பயிற்சியாளர் சதீஷ் தனது வேதனையை தெரிவித்துள்ளார்.

சுமார் 15-க்கும் மேற்பட்ட சிறுமிகள் போதுமான பண வசதி இல்லாததால் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான சத்தான உணவை எடுத்துக்கொள்ள முடியாமலும், பள்ளிக் கட்டணத்தை செலுத்த முடியாமலும் தவித்து வருகின்றனர். இந்த விவரம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சிஎஸ்கே வீரருமான சுரேஷ் ரெய்னாவின் பார்வைக்கு சென்றுள்ளது.

உடனே இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘கபடி விளையாட்டின் மூலம் தங்களது ஸ்காலர்ஷிப் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த சிறுமிகள் முயன்று வருகின்றனர். தயவுகூர்ந்து அவர்களுக்கு நிதி உதவி அளித்து உதவுங்கள்’ என ரெய்னா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்