‘ஒரு மேட்ச்ல அடிச்சா மட்டும் போதுமா’!.. ‘இதனாலதான் உங்களை இந்தியா டீம்ல எடுக்கவே மாட்டிக்காங்க’.. இளம் வீரரை ‘லெஃப்ட் ரைட்’ வாங்கிய கவாஸ்கர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இளம் வீரரை சரமாரியாக விமர்சனம் செய்துள்ளார்.

14-வது சீசன் ஐபிஎல் தொடரின் 16-வது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், இளம் கேப்டன் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாஸ் பட்லர் மற்றும் மனன் வோஹ்ரா களமிறங்கினர். அப்போது முகமது சிராஜின் ஓவரில், 8 ரன்னில் ஜாஸ் பட்லர் அவுட்டாக, அடுத்ததாக கைல் ஜேமிசன் ஓவரில் மனன் வோஹ்ராவும் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து வந்த டேவிட் மில்லர் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனால் 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை ராஜஸ்தான் அணி இழந்தது.

இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் சிவம் தூபே கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதில் வாசிங்கடன் ஓவரில் சிக்ஸ் அடித்த சஞ்சு சாம்சன் (21 ரன்கள்), அடுத்த பந்திலேயே மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்த அவுட்டானார். இதனை களமிறங்கிய ரியான் பராக் 25 ரன்கள் அடித்து அவுட்டாகி வெளியேறினார்.

இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த சிவம் தூபே-ராகுல் திவேட்டியா கூட்டணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் சிவம் தூபே 46 ரன்களும், ராகுல் திவேட்டியா 40 ரன்களும் எடுத்து அசத்தினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை ராஜஸ்தான் அணி எடுத்தது.

இதனை அடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி, 16.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 101 ரன்களும், கேப்டன் விராட் கோலி 72 ரன்களும் எடுத்து அசத்தினர். இந்த கூட்டணியை கடைசி வரையிலும் ராஜஸ்தான் அணியால் பிரிக்கவே முடியவில்லை.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், ராஜஸ்தான் அணியின் இளம் கேப்டன் சஞ்சு சாம்சனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில், ‘ஒரு கேப்டனாக எப்போது முன் நிற்க வேண்டும். சஞ்சு சாம்சன் அதை முதல் போட்டியில் செய்தார். இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைக்காததுக்கு ஒரே காரணம், ஒரு போட்டியில் நன்றாக அடிப்பார், ஆனால் அடுத்த போட்டிகளில் அதை செய்ய மாட்டார். அதனால்தான் அவரை அணியில் இருந்து வெளியே உட்கார வைத்துள்ளார்கள்’ என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் 119 ரன்கள் அடித்திருந்தார். இதனை அடுத்து நடந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 ரன்னும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 1 ரன்னும், நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 21 ரன்களும் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்