‘ஒரு பவுண்டரி கூட அடிக்கல’.. ஏன் தோனி பேட்டிங்கில் தடுமாறினார்..? கூலாக ஸ்டீபன் பிளெமிங் கொடுத்த விளக்கம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனியின் ஆட்டம் குறித்து எழுந்த கேள்விக்கு பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் விளக்கமளித்துள்ளார்.

துபாய் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் (IPL) லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக அம்பட்டி ராயுடு 55 ரன்கள் எடுத்தார்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணி, 19.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களை எடுத்தது. இதனால் 3 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 39 ரன்களும், ஹெட்மயர் 28 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில், இப்போட்டியில் தோனியின் பேட்டிங் குறித்து கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு போட்டி முடிந்தபின் விளக்கமளித்த சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், ‘தோனி மட்டும் கிடையாது, எல்லா வீரர்களும் இந்த மைதானத்தில் பேட்டிங் செய்ய சிரமப்பட்டனர். இந்த மைதானம் சற்று கடினமாக இருந்ததால், இரண்டு அணிகளுமே பேட்டிங்கில் தடுமாறின. அதனால் தோனி மட்டும் குறை சொல்லக்கூடாது.

ஒரு மேட்ச் வின்னிங் இலக்கிற்கு 10-20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். நாங்களும் இப்போட்டியில் சில தவறுகளை செய்துள்ளோம். விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தபோது, ஒரு நிலையான பேட்டிங் கூட்டணி அமைத்திருக்க வேண்டும். அதேபோல் டெல்லி அணி கடைசி 5 ஓவர்களை சிறப்பாக வீசியது. எதிரணி சிறப்பாக பவுலிங் வீசியது என்பதை நாங்கள் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.

ப்ளே ஆஃப் (PlayOffs) சுற்றுக்கு செல்லும் முன் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்ததால், அழுத்தம் ஏதும் எங்களுக்கு இல்லை. அதேவேளையில் இந்த தோல்வியில் இருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளோம். இனி வரும் போட்டிகளில் அதை சரிசெய்வோம்’ என ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார். இப்போட்டியில் 27 பந்துகளை எதிர்கொண்ட தோனி 18 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில் அவர் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்