‘எல்லாரையும் தனிமைப்படுத்துங்க’.. 3 பேருக்கு கொரோனா.. இலங்கை கிரிக்கெட் வாரியம் எடுத்த அதிரடி முடிவு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கை வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முக்கிய முடிவு எடுத்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஏ அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்காக கடந்த மாதம் 28-ம் தேதி கொழும்பு சென்ற ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே இலங்கை அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடியது. இந்த தொடர் முடிந்து கடந்த 6-ம் தேதி இலங்கை வீரர்கள் நாடு திரும்பினர். அப்போது 3 இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் 4 நிர்வாகிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், அனைவருக்கும் நெகட்டீவ் என வந்துள்ளது. ஆனாலும் வீரர்களின் தனிமைப்படுத்துதல் தொடரும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி வரும் ஜூலை 13-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முந்தைய நாள் வரை இலங்கை வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பார்கள் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் இரு அணிகளுக்கும் இடையேயான பயிற்சி ஆட்டமும் கைவிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி சமீப காலமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் படுதோல்வியை சந்தித்தது. இந்த சூழ்நிலையில் கொரோனா தொற்று காரணமாக இந்தியாவுடனான பயிற்சி ஆட்டமும் கைவிடப்பட்டுள்ளது. இது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்