VIDEO: ‘என்னங்க இப்படி பண்ணிட்டாங்க’.. ‘செம’ கோபம்.. வைரலாகும் இலங்கை பயிற்சியாளரின் செயல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்ததும், இலங்கை அணியின் பயிற்சியாளர் கோபமாக சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக அலசங்கா 65 ரன்களும், அவிஷ்கா பெர்னாண்டோ 50 ரன்களும், கருணாரத்னே 44 ரன்களும் எடுத்திருந்தனர். இந்திய அணியைப் பொறுத்தவரை புவனேஷ்வர் குமார் மற்றும் சஹால் தலா 3 விக்கெட்டுகளும், தீபக் சஹார் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இதனை அடுத்து 276 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா 13 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த இஷான் கிஷன் 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனைத் தொடர்ந்து கேப்டன் ஷிகர் தவானும் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 65 ரன்களுக்கும் 3 விக்கெட்டுகளை இந்தியா பறிகொடுத்தது.

இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த மனிஷ் பாண்டே மற்றும் சூர்யகுமார் யாதவ் கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 37 ரன்கள் எடுத்திருந்தபோது எதிர்பாராத விதமாக மனிஷ் பாண்டே ரன் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா ரன் ஏதும் எடுக்காமல் வந்த வேகத்தில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய க்ருணால் பாண்ட்யாவுடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போது சண்டகன் ஓவரில் எதிர்பாராத விதமாக எல்பிடபுள்யூ ஆகி சூர்யகுமார் யாதவ் அவுட்டாகினார்.

இதனால் 160 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி பரிதாப நிலையில் இருந்தது. இந்த சமயத்தில் 7-வது வீரராக தீபக் சஹார் களமிறங்கினார். இவர் ஆரம்பம் முதலே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனிடையே க்ருணால் பாண்ட்யா, இலங்கை வீரர் ஹசரங்கா ஓவரில் போல்டாகி வெளியேற, 8-வது வீரராக புவனேஷ்வர் குமார் களமிறங்கினார். இருவர்கள் இருவரும் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதனால் இந்திய அணி மெல்ல மெல்ல சரிவில் இருந்து மீண்டது.

இதில் புவனேஷ்வர் குமார் சிங்கிள் எடுத்து தீபக் சஹாருக்கு ஸ்ட்ரைக்கு கொடுக்க, அவர் அவ்வப்போது பவுண்டரிகளை விளாசி அசத்தினார். இதனால் 49.1 ஓவர்களில் 277 ரன்கள் எடுத்து இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது. இப்போட்டியில் தீபக் சஹாருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதும், இலங்கை அணியின் பயிற்சியாளர் ஆர்தர் கோபமாக டிரெஸ்ஸிங் ரூமிற்கு சென்றார். ஏனென்றால் இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் 160 ரன்களுக்கு உள்ளாகவே ஆட்டமிழந்தனர். அதனால் இலங்கை அணிதான் வெற்றி பெரும் என அனைவரும் கருதினர்.

ஆனால் 7-வது மற்றும் 8-வது வீரர்களாக களமிறங்கிய தீபக் சஹாரையும், புவனேஷ்வர் குமாரை இலங்கை வீரர்களால் கடைசி வரை அவுட்டாக்க முடியவில்லை. இதனால் இந்திய அணியிடம் நூலிழையில் இலங்கை அணி வெற்றி பறிகொடுத்தது. இதுதான் இலங்கை அணியின் பயிற்சியார் ஆர்த்தரின் கோபத்துக்கு காரணம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்