‘கேன் வில்லியம்சன் அவுட் சர்ச்சை’.. பிசிசிஐ வரை சென்ற விவகாரம்.. என்ன நடந்தது..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் அம்பயர் மீது ஹைதராபாத் அணி நிர்வாகம் புகார் கொடுத்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பு கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 10 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து வருகிறது. அதே போல் ஹைதராபாத் அணி விளையாடிய ஒரு போட்டியில் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் அம்பயர் மீது ஹைதராபாத் அணி பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளது. கடந்த மார்ச் 29-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 210 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

இப்போட்டியில் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அவுட்டானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா வீசிய ஓவரில் கேன் வில்லியம்சன் அடித்த பந்து எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் கைக்கு சென்றது. ஆனால் அவர் பந்தை பிடித்த போது அவர் கையில் இருந்து நழுவி அருகில் நின்ற தேவ்தத் படிக்கல் கைக்கு சென்றது. அப்போது அவர் பந்தை பிடித்தபோது, பந்து தரையில் பட்டதுபோல் இருந்தது.

இதனால் களத்தில் இருந்த அம்பயர்கள் மூன்றாம் அம்பயரிடம் ரிவ்யூ கேட்டனர். இதை சரி பார்த்த மூன்றாம் அம்பையர் அனந்தபத்மநாபன் அவுட் என அறிவித்தார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது கேன் வில்லியம்சன் 2 ரன் மட்டுமே எடுத்திருந்தார். இவர் விக்கெட் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், பெரும் சர்ச்சையானது.

இந்த நிலையில் இதுகுறித்து பிசிசிஐயிடம் ஹைதராபாத் நிர்வாகம் புகார் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக பேசிய ஹைதராபாத் அணி நிர்வாகி ஒருவர், ‘ஆமாம், இது பற்றி பிசிசிஐயிடம் நாங்கள் புகார் செய்துள்ளோம். எங்களின் தலைமை பயிற்சியாளரின் அறிவுரையின் படி இந்த புகாரை கொடுத்திருக்கிறோம். அதற்கான முடிவு கிடைக்கும் வரை பின் தொடர்வோம்’ என கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து பேசிய ஹைதராபாத் அணியை தலைமை பயிற்சியாளர் டாம் மூடி, ‘டிவி ரீப்ளேயில் பார்த்த பின்பும் அவுட் என அறிவிக்கப்பட்டது எங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. களத்தில் இருந்த அம்பயர்கள் சரியாக நடந்து கொண்டனர். ரீப்ளேயில் பார்க்கும் போது அவுட் இல்லை என்பதற்கான ஆதாரம் தெளிவாக கிடைத்தது.

நாங்கள் அம்பயர்கள் இல்லைதான், ஆனால் அந்த தருணத்தில் எது சரியான முடிவு என்பது எங்களுக்கு தெரியும்’ என டாம் மூடி கூறியுள்ளார். அப்போட்டியில் மெதுவாக பந்துவீசியதற்காக ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்