ஒரு காலத்துல எப்படி இருந்த மனுசன்.. ‘வார்னருக்கா இந்த நிலைமை’.. கொதித்தெழுந்த ரசிகர்கள்.. என்ன நடக்கிறது SRH-ல்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ப்ளேயிங் லெவனில் மீண்டும் டேவிட் வார்னர் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் (IPL) தொடரின் 40-வது லீக் போட்டி இன்று (27.09.2021) துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கேன் வில்லியம்சன் (Kane Williamson) தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் (SRH), சஞ்சு சாம்சன் (Sanju Samson) தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் (RR) மோதுகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்ததால், ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக எவின் லூயிஸ் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இதில் புவனேஷ்வர் குமார் வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் எவின் லூயிஸ் அவுட்டாகினார். இதனை அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சனுடன் ஜோடி சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்.

அப்போது சந்தீப் ஷர்மா வீசிய 9-வது ஓவரில் போல்டாகி யஷஸ்வி ஜெய்ஸ்வால் (36 ரன்கள்) வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன் 4 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். விக்கெட்டுகள் ஒருபுறம் விழுந்தாலும், கேப்டன் சஞ்சு சாம்சன் (82 ரன்கள்) பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை ராஜஸ்தான் அணி எடுத்தது.

இந்த நிலையில், இப்போட்டிக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ப்ளேயிங் லெவனில் டேவிட் வார்னர் (David Warner) இடம்பெறாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 1-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

அதனால் இந்த தொடரின் பாதியிலேயே டேவிட் வார்னர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டார். இதன்பின்னர் நியூஸிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் இன்றைய ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர் இடம்பெறாதது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் பலரும் சமூக வலைதளங்களில் ஹைதராபாத் அணியை விமர்சனம் செய்து வருகின்றனர்.

கடந்த 2016-ம் ஆண்டு டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதேபோல் ஐபிஎல் வரலாற்றில் 4 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஹைதராபாத் அணி தகுதி பெற்றுள்ளது. அதில் 3 முறை டேவிட் வார்னர் கேப்டனாக இருந்தபோது நடந்தது.

ஆனால் சமீபகாலமாக டேவிட் வார்னர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் ரன்களை அவர் எடுக்கவில்லை. கடந்த சனிக்கிழமை பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டில் டேவிட் வார்னர் விளையாடி இருந்தார். அப்போட்டியில் 2 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். அதனால் இன்றைய ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவரை எடுக்கவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் டேவிட் வார்னருக்கு பதிலாக அறிமுக வீரர் ஜேசன் ராய் (Jason Roy) இடம்பெற்றுள்ளார். முன்னதாக கேப்டன் பதவில் இருந்து விலகிய பின், இதேபோல் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்