‘அவரோட கேப்டன்சில விளையாடனும்’... ‘100 விக்கெட் எடுக்கனும்’... ‘வாழ்நாள் தடை குறைக்கப்பட்டதால்’... 'விருப்பம் தெரிவித்த வீரர்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிரிக்கெட் சூதாட்ட வழக்கில் ஸ்ரீசாந்த் மீதான தடை 7 ஆண்டுகளாக முன் தேதியிட்டு குறைக்கப்பட்டதையடுத்து, அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதோடு தனது விருப்பத்தையும் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஸ்ரீசாந்த் அளித்தப் பேட்டியில், ‘இந்த விஷயம் எனக்கு பெரு மகிழ்ச்சியை அளித்துள்ளது. எனது நலம் விரும்பிகள், எனக்காக பிரார்த்தனை செய்தோருக்கு நன்றிகள். எனக்கு வயது 36, தடை முடியும் போது 37 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 87 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளேன், 100 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்பது என் விருப்பம். இந்திய டெஸ்ட் அணிக்கு நான் திரும்ப முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது. விராட் கோலி கேப்டன்சியின் கீழ் ஆட வேண்டும் என்பது எப்போதுமே என் ஆசையாக இருந்து வந்துள்ளது’ என்று கூறினார்
கடந்த 2013-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட்டதாக டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரிய ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி ஆயுட்கால தடை விதித்தது. இந்த தடையை கேரள ஐகோர்ட்டு தனி நீதிபதி ரத்து செய்ததுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், கேரள ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் ஸ்ரீசாந்தின் ஆயுட்கால தடையை உறுதி செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்ரீசாந்த் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘ஸ்ரீசாந்தின் தண்டனை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நன்னடத்தை அதிகாரியான முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின் 3 மாத காலத்துக்குள் முடிவு செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இதன் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், ‘ஸ்ரீசாந்த் எந்தவொரு வணிக கிரிக்கெட்டிலும் பங்கேற்கவோ அல்லது பி.சி.சி.ஐ. அல்லது அதன் துணை நிறுவனங்களின் எந்தவொரு நடவடிக்கைகளுடனும் தொடர்பு கொள்வதையோ விதித்திருந்த தடை 13.09.2013 முதல் அமல்படுத்தப்பட்ட ஏழு ஆண்டுகள் ஆகும். அவரது வாழ்நாள் தடை ஏழு வருட இடைக்கால தடையாக மாற்றப்படுகிறது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் ( 07-08-2020) முதல் அனைத்து வகையான கிரிக்கெட்டையும் விளையாடலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீசாந்த், 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியிலும், 2011-ம் ஆண்டு உலக கோப்பையை (50 ஓவர்) வென்ற இந்திய அணியிலும் இடம் பிடித்தவர் ஆவார். அவர் இந்திய அணிக்காக 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் பத்து 20 ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார்.
மற்ற செய்திகள்