செய்தியாளர்கள் எழுப்பிய ‘சர்ச்சை’ கேள்வி.. ‘இதை நீங்க அவங்க கிட்டதான் கேட்கணும்’!.. நைசாக நழுவிய கங்குலி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இளம் வீரர் சுப்மன் கில் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பதிலளித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி இந்த தொடர் தொடங்க உள்ளது. இதற்காக இந்திய அணியின் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயிற்சியின்போது இளம் வீரர் சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் இங்கிலாந்து தொடரில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

அதனால் சுப்மன் கில்லுக்கு மாற்றாக இளம் வீரர்கள் ப்ரித்வி ஷா மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகிய இரண்டு வீரர்களை இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்குமாறு தேர்வுக்குழுவிடம் கேப்டன் விராட் கோலியும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் தற்போது இந்த இரண்டு வீரர்களும் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனால் ப்ரித்வி ஷா மற்றும் தேவ்தத் படிக்கலை இங்கிலாந்துக்கு அனுப்ப தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மா மறுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி நேற்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், சுப்மன் கில்லுக்கு மாற்று வீரரை அனுப்புவதில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த கங்குலி, ‘சுப்மன் கில்லுக்கு மாற்று வீரரை அனுப்புவது குறித்த கேள்விக்கு பதில் வேண்டும் என்றால், நீங்கள் தேர்வுக்குழுவினரைத்தான் கேட்க வேண்டும். அந்த குழுவில் இடம்பெற்றிருக்கும் உறுப்பினர்கள்தான் இதற்கு பதில் கூற முடியும். ஏனென்றால் அவர்கள்தான் இந்த தொடருக்கான அணியை தேர்வு செய்தனர்’ என பதிலளித்துள்ளார்.

இலங்கை சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. வரும் ஜூலை 13-ம் தேதி தொடங்கும் இந்த தொடர், ஜூலை 25-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இந்த தொடர் முடிவடைந்த பின் ப்ரித்வி ஷா மற்றும் தேவ்தத் படிக்கல் இங்கிலாந்து செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்