VIDEO: ‘இதெல்லாம் இங்க பேசுற விஷயமா..!’ இலங்கை கேப்டனுடன் சண்டை.. ‘கோபமாக’ நடையை கட்டிய கோச்.. பரபரப்பு சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்ததும், இலங்கை அணியின் கேப்டனும், பயிற்சியாளரும் மைதானத்திலேயே சண்டையிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. முன்னதாக நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவிடம் இலங்கை தோல்வியை தழுவியது. அதனால் இப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என ஆரம்பத்தில் இருந்தே இலங்கை அணி முனைப்பு காட்டியது.

அதன்படி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக அசலங்கா 65 ரன்களும், ஆவிஷ்கா பெர்னாண்டோ 50 ரன்களும், கருணாரத்னே 44 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன்காரணமாக 160 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இந்திய அணி பறிகொடுத்தது. இதனால் இலங்கை அணி வெற்றி பெற வாய்ப்பு எளிதானது.

இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த தீபக் சஹார் மற்றும் புவனேஷ்வர் குமார் கூட்டணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இவர்கள் இருவரையும் கடைசி வரை இலங்கை வீரர்களால் அவுட்டாக்க முடியவில்லை. குறிப்பாக, கடைசி 12 பந்துகளுக்கு 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி இருந்தது.

இதனால் கடைசி வரை ஆட்டம் பரபரப்பாகவே காணப்பட்டது. அப்போது போட்டியின் 49-வது ஓவரை துஷ்மந்தா சமீரா வீசினார். அந்த ஓவரில் 2 பவுண்டரி உட்பட 12 ரன்கள் சென்றது. இதுதான் இந்திய அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவை இருந்த நிலையில், தீபக் சஹார் பவுண்டரி அடித்து அசத்தினார். இதனால் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் பெற்றி பெற்றது.

கைக்கு வந்த வெற்றி நூலிழையில் தவறவிட்டதால், இலங்கை அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கடும் அதிருப்தி அடைந்தார். இதனால் போட்டி முடிந்ததும் மைதானத்துக்கு வந்த அவர், இலங்கை கேப்டன் தாசுன் ஷானகா உடன் வாக்குவாதம் செய்தார். அப்போது தாசுன் ஷானகா ஏதோ சொல்ல, அங்கிருந்து கோபமாக மிக்கி ஆர்தர் சென்றுவிட்டார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், எதுவாக இருந்தாலும் டிரெஸ்ஸிங் ரூமில் வைத்து பேசுவதை விடுத்து இப்படி மைதானத்தில் இருவரும் சண்டையிட்டது தவறு என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்