‘எனக்காக வேண்டிக்கிட்ட எல்லோருக்கும் நன்றி’!.. ‘சீக்கிரம் மீண்டு வருவேன்’.. இளம்வீரர் உருக்கம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தனக்காக வேண்டிக்கொண்ட அனைவரும் மனதார நன்றி தெரிவிப்பதாக இந்திய அணியின் இளம்வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நேற்று முன்தினம் மகராஷ்டிரா மாநிலம் புனேயில் நடந்தது. இதில் 66 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

இப்போட்டியில் 2-வது இன்னிங்ஸின் 8-வது ஓவரில், இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ அடித்த பந்தை ஷ்ரேயாஸ் ஐயர் தடுக்க பாய்ந்தார். அப்போது தரையில் விழுந்த அவருக்கு எதிர்பாராதவிதமாக இடது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் உடனடியாக களத்தில் இருந்து வெளியேறினார். காயத்தின் தன்மையை அறிய மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஸ்கேன் எடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் அவருக்கு இடது தோள்பட்டை கொஞ்சம் இறங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த காயம் குணமடைய பல வாரங்கள் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அத்துடன் வரும் ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டியின் முதல் பாதி போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர் அந்த உள்ளார். இவரது தலைமையில் டெல்லி அணி கடந்த ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. கடந்த சீசனில் 519 ரன்கள் குவித்த ஷ்ரேயாஸ் ஐயர் ஆட முடியாதது, டெல்லி அணிக்கு பெரிய இழப்பாக கருதப்படுகிறது. மேலும், புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய நிலைக்கும் அந்த அணி தள்ளப்பட்டுள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் குணமடைந்து போட்டிக்கு திரும்பும் வரை டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பை ரிஷப் பந்த், ஸ்டீவன் சுமித், அஸ்வின் ஆகியோரில் ஒருவர் ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தான் காயத்தில் இருந்து குணமடைய வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்த ஷ்ரேயாஸ் ஐயர், சீக்கிரம் மீண்டு வருவேன், என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்