‘திடீரென டிரெண்ட் ஆகும் ஷர்துல் தாகூர்’!.. அதுக்கு காரணம் அந்த ஒரே ஒரு ‘போட்டோ’ தான்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் திடீரென இணையத்தில் வைரலாகி வருகிறார்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. இதில் டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், டி20 தொடரை 3-2 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்தியா வென்று கோப்பையை கைப்பற்றியது.

இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கடைசி ஒருநாள் போட்டியில், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதில், இந்திய அணியைப் பொறுத்தவரை விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 78 ரன்களும், தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 67 ரன்களும், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 64 ரன்களும் எடுத்தனர்.

அதேபோல் இந்திய அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர்களான ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளும், நடராஜன் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதில், இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் மொத்தமாக 7 விக்கெட்டுகள் எடுத்தார். அதிலும் குறிப்பாக ஜாஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ, இயன் மோர்கன், டேவிட் மலான் போன்ற முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஷர்துல் தாகூர் அசத்தினார். இதனால் கடைசி ஒருநாள் போட்டி முடிந்ததும், சிறந்த ஆட்டநாயகன் விருது ஷர்துல் தாகூருக்கு வழங்காதது ஆச்சரியமாக உள்ளதாக கேப்டன் கோலி கேள்வி எழுப்பினார். அப்போட்டியில் இங்கிலாந்து வீரர் சாம் கர்ரனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களைப் பார்த்து நடுவிரலை காட்டியதாக திடீரென ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால் அவர் நக்குல்பால் (knuckleball) வீசும் போது இதுபோன்று வைத்திருக்க வாய்ப்பு இருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்