உண்மையை சொல்லனும்னா ‘ஆட்டநாயகன்’ விருது அவருக்குதான் கொடுத்திருக்கணும்.. ஹிட்மேனுக்கு ரொம்ப பெரிய மனசுங்க..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் இளம் வீரர் குறித்து ரோஹித் ஷர்மா புகழ்ந்து பேசியுள்ளார்.

இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 127 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் இந்தியா இருந்தது.

அப்போது களமிறங்கிய இளம் வேகப்பந்து வீச்சாளர் சர்துல் தாகூர் (57 ரன்கள்), இங்கிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இதனால் இந்திய அணி 191 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 290 ரன்களை எடுத்து 99 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதனைத் தொடர்ந்து இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. ஆரம்பம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா சதம் (127 ரன்கள்) அடித்து அசத்தினார். அதேபோல் புஜாரா (61 ரன்கள்), ரிஷப் பந்த் (50 ரன்கள்) மற்றும் சர்துல் தாகூர் (60 ரன்கள்) ஆகியோர் அரைசதம் அடித்தனர். இதனால் இந்திய அணி 466 ரன்களை குவித்தது.

இதனை அடுத்து 368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடியது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோரி பர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீது ஜோடி 100 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை சோதித்தது. அப்போது சர்துல் தாகூர் வீசிய 41-வது ஓவரில் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து ரோரி பர்ன்ஸ் அவுட்டானார். இதனால் ஓரளவுக்கு நிம்மதி அடைந்த இந்திய அணிக்கு கேப்டன் ஜோ ரூட் சோதனை கொடுக்க ஆரம்பித்தார்.

இதனால் மீண்டும் சர்துல் தாகூருக்கு கேப்டன் கோலி ஓவர் கொடுத்தார். அவர் வீசிய 81-வது ஓவரில் ஜோ ரூட் போல்டாகி வெளியேறினார். இதுதான் ஆட்டத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாக, 210 ரன்களுக்கு இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில் போட்டி முடிந்தபின் பேசிய ரோஹித் ஷர்மா, ‘வெளிநாட்டு மைதானங்களில் கிடைக்கும் வெற்றி எப்போது சிறப்பானது. இந்த தொடரில் ஆரம்பம் முதலே நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். அடுத்த போட்டியிலும் இதேபோன்ற ஆட்டத்தையே கொடுப்போம். பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் ஒரு அணியாக செயல்பட்டதால் இந்த வெற்றியை பெற்றுள்ளோம்’ என அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய ரோஹித் ஷர்மா, ‘குறிப்பாக இப்போட்டியில் சர்துல் தாகூர் மிகவும் உதவியாக இருந்தார். அதிலும் இரண்டாவது இன்னிங்ஸில் ஜோ ரூட்டின் விக்கெட்டை வீழ்த்தியது திருப்புமுனையாக அமைந்தது. சர்துல் தாகூர் விளையாடியது மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அவர்தான் ஆட்டநாயகன் விருதுக்கு தகுதியானவர்.

முதல் இன்னிங்ஸில் அவர் செய்த பேட்டிங்கை யாராலும் மறக்க முடியாது. ஒவ்வொரு முறை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்’ என சர்துல் தாகூரை ரோஹித் ஷர்மா புகழ்ந்து பேசினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்