"இந்தியா 'டீம்'ல 'ஹர்திக்' இல்லன்னு ஃபீல் பண்ண வேணாம்.. அவரோட 'வேலை'ய இந்த 'சிஎஸ்கே' வீரர் பாத்துக்குவாரு.." எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள 'கருத்து'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனா தொற்றின் காரணமாக, ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால், மீதமுள்ள போட்டிகளை வேறு நாடுகளில் வைத்து நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, ஜூன் மாதம் 18 ஆம் தேதியன்று, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் வைத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில், நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதவுள்ளதையடுத்து, கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டிக்காக தற்போது முதலே, மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

மேலும், இந்த போட்டிக்காக 20 பேர் கொண்ட இந்திய அணியும், சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. பிரித்வி ஷா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட சில வீரர்களின் பெயர் இந்த பட்டியலில் இடம்பெறாமல் போனது, அதிகம் கேள்விகளையும் எழுப்பியிருந்தது. அதிலும் குறிப்பாக, வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இடத்தில் ஒரு வீரர் இல்லாமல் போனது, சற்று ஆச்சரியமாகவும் அமைந்தது.

இதுவரை அந்த இடத்தில் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) ஆடி வந்த நிலையில், அவருக்கு காயம் ஏற்பட்ட பிறகு, தொடர்ந்து அவரால் பந்து வீச முடிவதில்லை. சமீபத்தில் அவர் ஆடிய சில தொடர்களிலும், பேட்டிங் மட்டுமே செய்திருந்தார். ஹர்திக் பாண்டியாவால் பந்து வீச முடியாமல் போனதால் தான், அவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணியில் சேர்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

அவர் இல்லாததால், அவருக்கான வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூரின் சிறுவயது பயிற்சியாளரான தினேஷ் லாட், இதுபற்றி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 'ஒரு பயிற்சியாளாராக, ஷர்துல் தாக்கூரை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் அணியில் எடுக்க வேண்டும் என்றே நான் சொல்வேன். சமீப காலத்தில் ஷர்துல் ஆடிய ஆட்டமே இதற்கு உதாரணம். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார்.

ஆனால் வீரர்கள் தேர்வு என்பது, அணி நிர்வாகம் மாற்றம் பயிற்சியாளர்கள் எடுக்கும் முடிவு. இந்திய அணியில் ஒரு சிறந்த ஆல் ரவுண்டருக்கான இடம் காலியாக உள்ளது. ஹர்திக் பாண்டியா ஒரு ஆல் ரவுண்டராக தான் ஆடி வருகிறார். ஆனால், அவரால் தற்போது பந்து வீச முடிவதில்லை.


ஒரு அணிக்கு எப்போதும் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் தேவை. அதற்கான வரிசையில், முதலிடத்தில் இருப்பவர் ஷரதுல் தாக்கூர் தான். ஆல் ரவுண்டர் இடத்தை அவர் நிச்சயம் சிறப்பாக நிரப்புவார்' என தாக்கூரின் சிறுவயது பயிற்சியாளர் தினேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில், பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியின் போது, 7 விக்கெட்டுகள் எடுத்த ஷர்துல் தாக்கூர், முதல் இன்னிங்ஸில் 67 ரன்கள் எடுத்தும் அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்