பிட்ச் மாறப்போகுது, இப்போ போய் இப்படி ‘டீம்’ எடுத்து வச்சிருக்கீங்க.. நியூஸிலாந்து ப்ளேயிங் 11-ஐ கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பிய்சன்ஷிப் இறுதிப்போட்டிக்கான நியூஸிலாந்து ப்ளேயிங் லெவன் அதிருப்தி அளிப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மழை காரணமாக 18-ம் தேதி நடைபெற இருந்த முதல் நாள் ஆட்டம் தடைபட்டது. இதனை அடுத்து இரண்டாம் நாளான நேற்று போட்டி தொடங்கப்பட்டது.

இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இதுவரை 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களை இந்திய அணி எடுத்துள்ளது. களத்தில் கேப்டன் விராட் கோலி மற்றும் துணைக் கேப்டன் ரஹானே உள்ளனர்.

இந்த நிலையில் நியூஸிலாந்து அணியின் ப்ளேயிங் லெவன் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னே ட்வீட் செய்துள்ளார். அதில், ‘நியூஸிலாந்து அணி ஒரு சுழற்பந்து வீச்சாளர் கூட இல்லாமல் களமிறங்கியிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. சவுத்தாம்ப்டன் மைதானத்தில் மிகப்பெரிய அளவில் பந்து ஸ்பின் ஆக போகிறது. அதற்கான அறிகுறிகள் தற்போதே தெரிய தொடங்கியுள்ளது. மழை மட்டும் குறுக்கிடாமல் இருந்தால், முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 275 ரன்கள் முதல் 300 ரன்கள் அடித்தால் போதும், போட்டி அவர்களின் பக்கம் சென்றுவிடும்’ என ஷேன் வார்னே பதிவிட்டுள்ளார்.

சவுத்தாம்ப்டன் மைதானம் வழக்கமாகவே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவாது என்றும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கே சாதகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதுவும் அங்கு மழை பெய்து வருவதால், வேகப்பந்து வீச்சாளர்களே இந்த மைதானத்தில் ஆதிக்கம் செலுத்த போகின்றனர் என சொல்லப்படுகிறது. அதனால் நியூஸிலாந்து அணி ஒரு சுழற்பந்து வீச்சாளர்களை கூட வைத்துக் கொள்ளாமல், 5 வேகப்பந்து வீச்சாளர்களை ப்ளேயின் லெவனில் எடுத்துள்ளது.

ஆனால் இந்திய அணி 2 சுழற்பந்து வீச்சாளர்கள் (அஸ்வின், ஜடேஜா) மற்றும் 3 வேகப்பந்து வீச்சாளர்களை (பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி) ப்ளேயிங் லெவனில் எடுத்துள்ளது. ஆனாலும் நியூஸிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டாம் லாதம் பார்ட் டைம் சுழற்பந்து வீச்சாளர்களாக செயல்பட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்