பண்றதெல்லாம் பண்ணிட்டு ‘மன்னிப்பு’ கேட்டா மட்டும் விட்ருவோமா..! ஷாகிப் மீது எடுக்கப்பட்ட அதிரடி ஆக்ஷன்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடாக்கா பிரிமியர் லீக் போட்டியின் போது அம்பயரிடம் மிக கடுமையாக நடந்துக்கொண்ட ஷாகில் அல் ஹசன் மீது வங்கதேச கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வங்கதேச அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன், கடந்த 2006-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக விளையாடிவரும் ஷாகிப் அல் ஹசன், சர்வதேச கிரிக்கெட்டில் 57 டெஸ்ட் போட்டிகள், 212 ஒருநாள் மற்றும் 76 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அந்நாட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தாலும், தனிப்பட்ட முறையில் இவரது செயல்பாடுகள் சர்வதேச அரங்கில் அவருக்கு மோசமான பெயரையே பெற்றுத் தந்துள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு சூதாட்ட தரகர்கள் தன்னை அணுகியதாக ஒப்புக்கொண்ட ஷாகிப், சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஒரு வருடம் தடை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது வங்கதேசத்தில் டாக்கா பிரிமியர் லீக் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் போட்டி ஒன்றில், அம்பயர் அவுட் கொடுக்காத ஆத்திரத்தில் ஷாகிப் தனது காலால் ஸ்டம்பை எட்டி உதைத்தார். இதனை அடுத்து அந்த போட்டி மழை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டபோது அம்பயரை நோக்கி வேகமாக நடந்து வந்த ஷாகிப், ஸ்டம்பை பிடுங்கி ஆக்ரோஷமாக வீசினார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.
இதனை அடுத்து உடனடியாக தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த ஷாகிப் அல் ஹசன், தனது பேஸ்புக் பக்கத்தில் மன்னிப்பு கேட்டார். ஆனாலும் ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரர், இப்படி நடந்துக்கொண்டது கண்டிக்கத்தக்கது என்றும், அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக விசாரித்த வங்கதேச கிரிக்கெட் நிர்வாக அதிகாரிகள், இந்த மோசமான செயலுக்கு ஷாகிப் மன்னிப்பு கேட்டு இருந்தாலும் அவரது இந்த நடவடிக்கையை அனுமதிக்க முடியாது. அதனால் டாக்கா பிரிமியர் லீக் தொடரில், அடுத்த 3 போட்டிகளில் அவர் விளையாட தடை மற்றும் 5 லட்சம் ரூபாய் அபாரதம் விதித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்