‘ரசிகர்கள் கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்’!.. ஜெயிக்க வேண்டிய மேட்சை கோட்டைவிட்ட கொல்கத்தா.. பயங்கர அதிருப்தியில் ‘ஷாருக்கான்’ போட்ட ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்பதாக அந்த அணியின் உரிமையாளும், நடிகருமான ஷாருக்கான் ட்வீட் செய்துள்ளார்.

14-வது சீசன் ஐபிஎல் தொடரின் 5-வது போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 56 ரன்களும், கேப்டன் ரோஹித் ஷர்மா 43 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை ரசல் 5 விக்கெட்டுகளும், பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளும், வருண் சக்கரவர்த்தி, ஷாகிப் மற்றும் பிரஷித் கிருஷ்ணா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடியது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக நிதிஷ் ரானா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இந்த கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீராக ஸ்கோரை உயர்த்தியது. 33 ரன்கள் எடுத்திருந்தபோது ராகுல் சகார் வீசிய ஓவரில் சுப்மன் கில் அவுட்டாகினார்.

இதனை அடுத்து வந்த ராகுல் திரிபாதி (5), கேப்டன் இயன் மோர்கன் (7), ஷாகிப் அல் ஹசன் (9), தினேஷ் கார்த்திக் (8), ரசல் (9) என அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாக, 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக நிதிஷ் ரானா 57 ரன்கள் அடித்தார்.

இந்த நிலையில் கொல்கத்தா அணியின் உரிமையாளர்களில் ஒருவரும், நடிகருமான ஷாருக்கான் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், ‘ஏமாற்றமளித்த ஆட்டம். இதற்காக கொல்கத்தா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

ஷாருக்கானின் ட்வீட் குறித்து கூறிய கொல்கத்தா அணி வீரர் ரசல், ‘அந்த ட்வீட்டுக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன், ஆனால் முடிவில் அது ஒரு கிரிக்கெட் விளையாட்டு. இது ஒன்றும் முடிவில்லை. நாங்கள் நம்பிக்கையுடன்தான் இருக்கிறோம். இன்னும் நிறைய நல்ல போட்டிகளில் விளையாட உள்ளோம், எங்கள் வீரர்களை நினைத்தால் பெருமையாக உள்ளது. நாங்களும் கண்டிப்பாக ஏமாற்றம் அடைந்தோம், ஆனால் இது ஒன்றும் உலகத்தோட கடைசி இல்லை, 2-வது போட்டிதான், இதிலிருந்து நிறைய கற்றுள்ளோம்’ என கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்