‘தோனியோட சாயலை அப்படியே அவர்கிட்ட பார்த்தேன்’!.. இளம்வீரரை தாறுமாறாக புகழ்ந்த பட்லர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கர்ரனை, தோனியுடன் ஒப்பிட்டு ஜாஸ் பட்லர் புகழ்ந்து பேசியுள்ளார்.

இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பந்த் 78 ரன்களும், ஷிகர் தவான் 67 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 64 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை மார்க் வுட் 3 விக்கெட்டுகளும், ஆதில் ரஷித் 2 விக்கெட்டுகளும், சாம் கர்ரன், டோப்லே, பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து 330 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. இதனால் 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி இந்தியா கோப்பையை வென்றது.

இப்போட்டியில் 200 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி பரிதாப நிலையில் இருந்தது. மேலும் வெற்றி பெற 130 ரன்கள் தேவைப்பட்டது. இந்த சமயத்தில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் இளம் வீரர் சாம் கர்ரன், அணியை சரிவில் இருந்து மீட்கும் பொறுப்பை கையில் எடுத்தார். இதனை அடுத்து நிதானமாக ஆட ஆரம்பித்த அவர், கிடைக்கும் சமயத்தில் சிக்சர், பவுண்டரிகளை விளாச ஆரம்பித்தார்.

இதனால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் மெல்ல மெல்ல உயர்ந்தது. இவரை அவுட்டாக்க முடியால் இந்திய அணியும் சற்று திணறியது. மேலும் இந்திய வீரர்கள் பல கேட்ச்களை தவறவிட்டது சாம் கர்ரனுக்கு சாதகமாக அமைந்தது. 2 விக்கெட்டுகளே மிச்சம் இருந்த நிலையில், கடுமையான அழுத்தத்திற்கு இடையில் இங்கிலாந்து அணியை வெற்றிக்கு அருகே சாம் கர்ரன் கொண்டு வந்தார்.

இந்த நிலையில் கடைசி ஓவரில் 14 ரன்கள் அடித்தால் என்ற நிலையில் இங்கிலாந்து அணி இருந்தது. ஆனால் அந்த ஓவரை வீசிய தமிழக வீரர் நடராஜன், தனது சிறப்பான பந்துவீச்சால் 6 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியது. இதில் சாம் கர்ரன் 95 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் 8-வது விக்கெட்டில் களமிறங்கி அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை சாம் கர்ரன் படைத்தார்.

இந்த நிலையில் சாம் கர்ரன் குறித்து Sportskeeda சேனலுக்கு அளித்த பேட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் புகழ்ந்து பேசியுள்ளார். அதில், ‘இன்றைய போட்டியைப் பற்றி தோனியிடம் சாம் கர்ரன் கண்டிப்பாக பேசுவார் என்று நினைக்கிறேன். அந்த நேரத்தில் தோனி என்ன செய்திருப்பாரோ, அதே சாயலை சாம் கர்ரனிடம் பார்த்தேன். தோனி ஒரு சிறந்த மனிதர், அற்புதமான கிரிக்கெட் வீரர், பினிஷர் என்று எல்லோருக்கும் தெரியும். தோனி போன்ற பக்குவம் கொண்ட ஒரு வீரருடன் (சாம் கர்ரன்) டிரெஸ்ஸிங் ரூமை பகிர்வதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது’ என ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் கடந்த சீசனில் தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக சாம் கர்ரன் விளையாடினார். அப்போது பல போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களை அவர் கவர்ந்தார். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரிலும் சென்னை அணியில் சாம் கர்ரன் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்