உங்களுக்கு வந்தா ரத்தம்.. எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா.. கொல்கத்தா கேப்டனை வச்சி செஞ்ச சேவாக்.. என்ன காரணம்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் இயான் மோர்கனை சேவாக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

டெல்லி கேப்பிடல் (DC) மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் (IPL) லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி அணியை 3 விக்கெட் வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 4-ம் இடத்துக்கு கொல்கத்தா அணி முன்னேறியுள்ளது.

இந்த நிலையில் இப்போட்டியின் இடையே கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் இயான் மோர்கனும் (Eoin Morgan), டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கும் (Ashwin) இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் (Dinesh Karthik), அஸ்வினை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பினார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தினேஷ் கார்த்திக் அங்கு நடந்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘ராகுல் திரிபாதி த்ரோ செய்த பந்து, பேட்ஸ்மேனின் மேல் பட்டு வெளியே சென்றது. அப்போது ரிஷப் பந்தை ஒரு ரன்னுக்கு அஸ்வின் அழைத்தார். இதுதான் பிரச்சனைக்கு காரணம்.

ஸ்ப்ரிட் ஆஃப் கிரிக்கெட்டின் படி பேட்ஸ்மேனின் மேலே பந்து விழுந்து சென்றால், ரன் எடுக்கக் கூடாது என இயான் மோர்கன் கருதி இருக்கலாம். ஆனால் இதுகுறித்து எனக்கும் தனிப்பட்ட கருத்து உள்ளது. ஆனால் இப்போது அது தேவையில்லை’ என தினேஷ் கார்த்திக் கூறினார்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் (Virender Sehwag), இந்த விவகாரம் தொடர்பாக இயான் மோர்கனை விமர்சனம் செய்துள்ளார். அதில், ‘கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி பென் ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பந்து வெளியே சென்றது. அப்போது நியூஸிலாந்து அணிதான் வெற்றி பெற்றது, எங்களுக்கு உலகக்கோப்பை வேண்டாம் என லார்ட்ஸ் மைதானத்துக்கு வெளியே மோர்கன் தர்ணா செய்தாரா?’ என கிண்டலாக சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ஒருநாள் தொடருக்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்தும், நியூஸிலாந்தும் மோதின. அப்போது போட்டியின் கடைசி ஓவரின் 4-வது பந்தை எதிர்கொண்ட பென் ஸ்டோக்ஸ், அதை பவுண்டரிக்கு விரட்ட முயன்றார். ஆனால் நியூஸிலாந்து வீரர் கப்தில் ரன் அவுட் செய்யும் நோக்கத்துடன் விக்கெட் கீப்பருக்கு பந்தை வீசினார்.

ஆனால் பந்து எதிர்பாராதவிதமாக பென் ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்றது. இதற்கு அம்பயர் 6 ரன்கள் வழங்கினார். ஆனால் ஐசிசி விதிகளின்படி 5 ரன்கள் வழங்கியிருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. இது அப்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து அப்போட்டி டிராவில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் ஓவர் போட்டியும் டிராவானது. இதனால் அதிக பவுண்டரிகள் அடித்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இங்கிலாந்து அணிக்கு உலகக்கோப்பை வழங்கப்பட்டது. ஒருவேளை அம்பயர் அந்த 6 ரன்கள் வழங்காமல் இருந்தால் நியூஸிலாந்து அணி உலக்கோப்பையை வென்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்