"இந்த விஷயத்துல 'சிஎஸ்கே' தான்யா 'பெஸ்ட்'.. அவங்கள பாத்தாச்சும் கத்துக்கோங்க.." விளாசித் தள்ளிய 'சேவாக்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) ஆகிய அணிகள் மோதியிருந்தன.

இந்த போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன் படி, பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் அணி, ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால், 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 123 ரன்கள் மட்டுமே பஞ்சாப் அணியால் எடுக்க முடிந்தது.

தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி, ஆரம்பத்தில் சில முக்கிய விக்கெட்டுகளை இழந்தாலும், மோர்கன் மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோர் சிறப்பாக ஆடி, அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில், கொல்கத்தா அணி வெற்றி பெற்ற நிலையில், மோர்கன் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இந்த தோல்வியின் காரணமாக, பஞ்சாப் அணியின் பேட்டிங் லைன் அப், கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ராகுல், கிறிஸ் கெயில், நிக்கோலஸ் பூரான் போன்ற அதிரடி வீரர்கள் இருந்தும், பஞ்சாப் அணி பேட்டிங்கில் தடுமாறியிருந்தது.


இந்நிலையில், இது பற்றி பேசியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் (Sehwag), 'பஞ்சாப் அணியின் பந்து வீச்சு மிகச் சிறப்பாக உள்ளது. மும்பை அணிக்கு எதிராக, நடைபெற்ற கடைசி போட்டியிலும் கூட, அற்புதமாக பந்து வீசியிருந்தனர். ஆனால், பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்யும் போது தான் அதிகம் தடுமாறுகிறது.

அந்த அணியிலுள்ள அதிரடி வீரர்கள், சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்துகிறார்களா என்பதை பஞ்சாப் அணி உறுதி செய்ய வேண்டும். பஞ்சாப் அணியிலுள்ள வீரர்கள் நினைத்தால் போதும். நிச்சயம் அவர்களால் 200 ரன்களுக்கு மேல் குவிக்க முடியும். நான்கில் இரண்டு பேட்ஸ்மேன்கள் நிலைத்து விட்டாலே போதும். போட்டியை அவர்களே மாற்றி விடுவார்கள்.

இந்த விஷயத்தில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக உள்ளது. அந்த அணியிலுள்ள ஒரு பேட்ஸ்மேன் ஃபார்மாக ஆரம்பித்து விட்டால், அனைத்து வீரர்களும் தங்களது பங்களிப்பை அளித்து விடுவார்கள். ஒவ்வொரு வீரரும் 20 - 30 ரன்கள் வரை அடித்து ஸ்கோரை உயர்த்தி விடுவார்கள். அந்த விஷயம் தான் பஞ்சாப் அணியில் இல்லை. ஒரு வீரரை மட்டும் நம்பி இருக்காமல், அனைவரும் சிறந்த பங்களிப்பை அளிக்க வேண்டும்.

தொடக்க வீரர்கள் நிதானமாக ஆடுவதால் தான், மிடில் ஆர்டர் வீரர்களுக்கு நெருக்கடி ஏற்படுகிறது. இதனை அறிந்து கொண்டு, பஞ்சாப் அணி செயல்பட வேண்டும்' என பஞ்சாப் அணிக்கு, முக்கிய அறிவுரை ஒன்றை சேவாக் வழங்கியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்