தோனிய நாம 'மறக்கவே' மாட்டோம்...! 'ஆயிரம் கேப்டன் வந்தாலும் அவர் இடத்த நிரப்ப யாராலும் முடியாது...' - புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்..!.

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் வரலாற்றில் தோனியை போன்ற ஒரு கேப்டன் இனி கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று முன்னாள் இந்திய வீரர் பாராட்டியுள்ளார்.

இந்த வருட ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஆரம்பத்தில் சற்று சொதப்பினாலும் திடீரென சிம்ம சொப்பனமாக அனைத்து அணிகளையும் அடித்து துவம்சம் செய்து முன்னேறிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயன் மோர்கன் முதலில் பவுலிங் வீச முடிவு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் மலை போல் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக டூபிளசிஸ் 86 ரன்கள் அடித்து பின்னிவிட்டார்.

இந்த நிலையில் 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான சுப்மன் கில் 51 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 50 ரன்களும் அடித்து அவுட் ஆயினர். ஆனால் அதற்கு அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சென்னை அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் திணறி போயினர்.

வந்த வேகம் தெரியாமல் அடுத்தடுத்து வெளியேறியதால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

சென்னை அணியின் இந்த வெற்றியை தொடர்ந்து முன்னாள் வீரர்கள் பலர் சென்னை அணியையும், சென்னை அணியின் வெற்றி வேந்தன் கேப்டன் தோனியையும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

முன்னாள் இந்திய வீரரான விரேந்திர சேவாக்கும், தோனியை புகழ்ந்து தள்ளினார்.

தோனி குறித்து சேவாக் கூறும்போது, “தோனி என்றால் யார்? அவரது கேப்டன்சி எப்படி இருக்கும் என்பது காலத்தினால் அழியாமல் நிலைத்து நிற்கும். அவர் அவரது அணிக்காக வென்று கொடுத்த கோப்பைகள் அவரை என்றும் மறக்காது.

தோனி ஒன்பது முறை இறுதி போட்டிகளில் விளையாடியுள்ளார், அதில் நான்கு முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். தோனியின் இந்த இடத்தை நிரப்புவது இனி எந்த கேப்டனாலும் முடியாத காரியம், இது சாதரண விசயமும் கிடையாது. இந்த தொடரின் சிறந்த அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான், இந்த தொடர் மூலம் சென்னை அணி மிகசிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது” என்று கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்