மூளையை 'யூஸ்' பண்ண மாட்டேங்குறார்...! நான் என்ன 'அவருக்கு' எதிரியா...? 'நல்லா விளையாடலன்னா சொல்ல தான் செய்வேன்...' - 'ஆர்சிபி' வீரரை விமர்சித்த சேவாக்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் டி-20 தொடரில் நேற்று முன்தினம் (26-09-2021) நடைபெற்ற போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக முடிவு செய்தது, முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணி சார்பில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 56 ரன்கள் விளாசினார். கேப்டன் கோலி 51 ரன்கள் அடித்து பந்துக்களை தெறிக்க விட்டார்.

இதனையடுத்து 166 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா (43 ரன்கள்) மற்றும் டி காக் (24 ரன்கள்) என நல்ல ஓப்பனிங் இருந்த போதிலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் வந்த வேகம் தெரியாமல் அவசரவசரமாக வெளியேறியதால் 111 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியை சந்தித்தது. புள்ளி பட்டியலிலும் அதள பாதாளத்திற்கு சென்று விட்டது.

ஆர்சிபி அணியின் இந்த பிரமாண்ட வெற்றிக்கு சாஹல், ஹர்சல் பட்டேல் மற்றும் கிளன் மேக்ஸ்வெல்லே மிக முக்கிய தூண்களாக இருந்தனர். ஹர்சல் பட்டேல் 4 விக்கெட்டுகளையும், சாஹல் 3 விக்கெட்டுகளையும், கிளன் மேக்ஸ்வெல் அரைசதம் அடித்ததோடு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணியை துவம்சம் செய்தனர்.

இந்த நிலையில், முன்பாக கிளன் மேக்ஸ்வெல்லை கடுமையாக விமர்சித்திருந்த முன்னாள் வீரர் விரேந்திர சேவாக், தற்போது கிளன் மேக்ஸ்வெல்லை உச்சிமுகர்ந்து பேசியுள்ளார்.

கிளன் மேக்ஸ்வெல் குறித்து சேவாக் பேசும்போது, “மேக்ஸ்வெல்லிடம் திறமை அதிகமாக இருக்கிறது. அவர் திறமையான பேட்ஸ்மேன் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால், அவர் மூளையைத்தான் சரியாக பயன்படுத்துவதில்லை.

மும்பை இந்தியன்சிற்கு எதிரான ஆட்டத்தில் மூளையை கொஞ்சம் பயன்படுத்தினார். அதனால் தான் மாஸ் காட்டினார். நான் மேக்ஸ்வெல்லுக்கு எதிரானவன் கிடையாது. அவர் மீது எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. அவர் ஆடும் விதத்திற்குத்தான் நான் விமர்சனம் வைப்பேன். மீண்டும் சொல்கிறேன் அவர் மிகவும் திறமையான வீரர். ஆனால், பெரும்பாலும் ஆட்டத்தின் சூழலை உணர்ந்துக்கொண்டு அவர் விளையாட மாட்டார், அது தான் அவரிடம் உள்ள முக்கிய கோளாறு” என கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்