'அவர் நமக்காக தான் விளையாடுறாரு'... 'ஒரு போட்டில சரியா விளையாடலனா' ... உடனே திட்டுறதா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலககோப்பையில் தோனியின் ஆட்டம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை போட்டிகள் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு தொடரில் எந்த போட்டியிலும் தோல்வி அடையவில்லை என வீறுநடை போட்ட இந்திய அணி, ஞாயிற்றுகிழமை நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் தோனியின் ஆட்டம் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் அவரின் ஆட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இந்திய அணியின் வெற்றிக்கு 71 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களத்தில் இருந்த தோனி, கேதார் ஜாதவ் ஜோடி அடித்து விளையாடாமல் சிங்கிள் ரன்கள் எடுப்பதிலேயே குறியாக இருந்தார்கள். இது இந்திய ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றமாக இருந்தது. இதையடுத்து தோனியின் ரசிகர்கள் கூட, அவரிடமிருந்து இது போன்ற ஆட்டத்தை எதிர்பார்க்கவில்லை என ட்விட்டரில் தங்களின் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்கள்.

இதனிடையே இன்று இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், தோனிக்கு ஆதரவாக இந்திய அணியின் துணை பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் '' தோனி அணிக்காகவே விளையாடி வருகிறார். ஒரு போட்டியில் சிறப்பாக ஆடவில்லை என்பதற்காக, தோனி மீது வைக்கப்படும் விமர்சனங்கள் ஏற்று கொள்ளும் வகையில் இல்லை. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் ஷர்மாவுடன் அவர் ஜோடி சேர்ந்து ஆடியதை நாம் மறக்க முடியாது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில், அந்த கடுமையான ஆடுகளத்தில் அரைசதம் கடந்து அணிக்கு முக்கிய பங்காற்றினார். இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் இறுதி கட்டத்தில், அவர்கள் வீசிய பந்துகள் அடிப்பதற்கு சவாலாக இருந்தது. மேலும் இந்திய அணி கடைசி ஓவர்களில் அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்ததே தோல்விக்கு காரணம்'' என  சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்