"அந்த ஒரு 'இந்தியன்' பவுலருக்கு பயந்து, பல 'ராத்திரி' தூக்கம் இல்லாம இருந்துருக்கேன்.." 'சங்ககாரா' சொன்ன 'சீக்ரெட்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கை கிரிக்கெட் அணியில் பல ஜாம்பவான்கள் இருந்த போதும், அதில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவர் குமார் சங்ககாரா (kumar Sangakkara). இடது கை பேட்ஸ்மேனான இவர், எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியிருந்தார்.

மேலும், தான் ஓய்வு பெற்ற சமயத்தில், டெஸ்ட் போட்டிகளில் அதிகம் ரன் அடித்த இலங்கை வீரர் என்ற பெருமையுடன் விளங்கினார். டெஸ்ட் போட்டிகளில் அதிக இரட்டை சதமடித்துள்ள சங்ககாரா, ஒரு நாள் போட்டிகளிலும் பல சாதனைகளை படைத்துள்ளார். இந்நிலையில், தனது கிரிக்கெட் பயணத்தில் தான் சந்தித்த மிகவும் சவாலான பந்து வீச்சாளார் யார் என்பது பற்றி, சங்ககாரா தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.

'ஒரு பேட்ஸ்மேனான எனக்கு, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அணில் கும்ப்ளே (Anil Kumble), பல நாட்கள் எனது இரவு தூக்கத்தைக் கெடுத்துள்ளார். அவர் மற்ற சுழற்பந்து வீச்சாளர்களை போன்றவர் அல்ல. மிகவும் உயரமும், ஹை ஆர்ம் ஆக்சனும் கொண்ட பந்து வீச்சாளர். நல்ல ஒரு வேகத்தில், நேராக, அதுவும் துல்லியமாக பந்து வீசக் கூடியவர். அப்படிப்பட்ட ஒருவரின் பந்து வீச்சில் ரன் அடிப்பது ஒன்றும் சுலபமில்லை.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை கும்ப்ளே எடுத்த போது, அதனைப் பார்க்கவே அற்புதமாக இருந்தது. அவரை எதிர்த்து பேட்டிங் செய்வது என்பது சவாலான ஒன்று. மிகவும் வெற்றி வேட்கை கொண்ட வீரர் அவர். இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலக கிரிக்கெட்டிற்கும் அவர் மிகப் பெரிய சாம்பியன் தான்' என சங்ககாரா தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் உலகின் சுழற்பந்து வீச்சாளர்களில் ஜாம்பவான்களில் ஒருவரான அணில் கும்பளே, 132 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 619 விக்கெட்டுகள் எடுத்துள்ள நிலையில், இந்திய வீரர்களில், டெஸ்ட் போட்டிகளில், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில், தற்போதும் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்