‘எங்க காலத்துல எல்லாம் இப்படி கிடையாது’!.. இப்போ இதை பார்க்கவே ரொம்ப ‘வருத்தமா’ இருக்கு.. கபில் தேவ் ஆதங்கம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை முன்னாள் கேப்டன் கபில்தேவ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணியின் மீது அதிக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இங்கிலாந்து போன்ற வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில், 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியது மிகப்பெரிய தவறாக பார்க்கப்படுகிறது. மழையால் முதல் நாள் போட்டி நடைபெறாமல் இருந்தும் கூட அணியை மாற்றாமல் அதே அணியை இந்தியா களமிறங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் போட்டி முடிந்துபின் பேசிய கேப்டன் விராட் கோலி அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இல்லாதது ஒரு மிகப்பெரிய குறையாக உள்ளது என்று கூறியிருந்தார். ஏற்கனவே இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக விளையாடி வந்தாலும், சமீப காலமாகவே காயத்தால் அவதிப்பட்டு அவ்வப்போது விளையாட முடியாமல் தவித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் குறித்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், ‘எங்கள் காலத்திலெல்லாம் வேகப்பந்து வீச்சாளர்கள் எத்தனை ஓவர்கள் தொடர்ச்சியாக வீசினாலும் அவ்வளவாக சோர்வடைய மாட்டார்கள். ஆனால் இப்போது இருக்கும் வேகப்பந்து வீச்சாளர்கள் 4 ஓவர்கள் வீசினாலே சோர்வாகி விடுகின்றனர். இதைப் பார்க்க வருத்தமாக உள்ளது. வீரர்களுக்கு காயம் ஏற்படுவது சகஜம்தான், ஆனால் அதிலிருந்து மீண்டு சிறப்பாக விளையாட வேண்டும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய ஹர்திக் பாண்ட்யா, அறுவை சிகிச்சைக்கு பின் தான் முழுமையாக தயாராகியுள்ளதாகவும், இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் நிச்சயம் பந்து வீசுவேன் என்றும் அவர் கூறியிருந்தார். தற்போது இலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்