அன்னைக்கு 241 ரன் அடிக்க ஒரு ‘பாட்டு’ தான் காரணம்.. ரொம்ப பிடிச்ச ஒரு ‘ஷாட்டை’ கடைசிவரை அடிக்கவே இல்ல.. ‘மாஸ்டர்’ சொன்ன ரகசியம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 241 ரன்கள் அடித்ததற்கு ஒரு பாட்டு தான் காரணம் என சச்சின் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர், ஜாம்பவான் சச்சின் டெண்டில்கர் தனது சிறப்பான ஆட்டத்தால் எதிரணியை ஆட்டம் காண வைத்துவிடுவார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை என அனைத்து நாடுகளிலும் சச்சின் சதம் அடித்து அசத்தியுள்ளார். இந்தநிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பியபோது ஒரு பாட்டு புத்துணர்ச்சி கொடுத்ததாக சச்சின் தெரிவித்துள்ளார்.

கடந்த 2003-2004ம் ஆண்டு கங்குலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 3 போட்டிகளில் சச்சின் சரியாக விளையாடவில்லை. இதனை அடுத்து சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் 241 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தியிருப்பார்.

இதுகுறித்து தற்போது தெரிவித்த சச்சின், ‘அந்த தொடரில் 3 டெஸ்ட் போட்டிகளில் நான் சரியாக விளையாடவில்லை. அப்போது எனக்கு நம்பிக்கை கொடுத்தது ஒரு பாடல்தான். டிரெஸ்ஸிங் ரூமில், ஹோட்டலில், பயணத்தின் போது, மைதானத்தில் என அனைத்து இடத்திலும் நான் “சம்மர் ஆப் 69” என்ற பாடலைக் கேட்டுக்கொண்டே இருந்தேன். அந்த பாட்டு மூலம் கிடைத்த நம்பிக்கையில் நான் அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாடி 241 ரன்களை சேர்த்தேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.

அந்த தொடரில் கவர் டிரைவ் ஷாட் விளையாடி சச்சின் தொடர்ந்து அவுட்டாகி கொண்டிருந்தார். அதனால் கடைசி டெஸ்ட் போட்டியில் தனக்கு மிகவும் பிடித்த கவர் டிரைவ் ஷாட் ஒன்று கூட சச்சின் அடிக்கவில்லை. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சச்சின் 241 ரன்கள் அடித்துவிட்டு டிரெஸ்ஸிங் ரூமிற்கு திரும்பியபோது ஆஸ்திரேலிய வீரர்கள் உட்பட ஒட்டுமொத்த மைதானமும் எழுந்து நின்று கைத்தட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்