'இனிமே தான் தரமான சவால்கள் எல்லாம் காத்திட்டு இருக்கு ஷ்ரேயாஸ்'- கங்குலியின் எச்சரிக்கையா? ஆலோசனையா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களில் மிகவும் முக்கியமானவராக மாறியுள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர். தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை அவர் தொடர்ந்து பயன்படுத்தி, அதிக ரன்கள் குவித்து வருகிறார்.

Advertising
>
Advertising

கடந்த சில காலமாக இந்திய அணிக்காக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஸ்ரேயாஸ் விளையாடி வந்தார். இந்நிலையில் நடந்து முடிந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்ரேயாஸுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. தான் அறிமுகமான முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே ஸ்ரேயாஸ், சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு அரைசதம் கடந்த கவனம் பெற்றார்.

இரண்டு ஸ்கோர்களுமே இந்திய அணி, அதிக விக்கெட்டுகளை இழந்து தள்ளாடிக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்டது என்பதால் ஸ்ரேயாஸின் ஆட்டம் அதிக பேரால் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் அடுத்ததாக விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் 26 ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்குகிறது.

டெஸ்ட் தொடருக்கான அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிமயமான பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் ஸ்ரேயாஸ் இடம் பிடித்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் சாதித்த ஸ்ரேயாஸ், வெளிநாட்டிலும் சாதிப்பாரா என்கிற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஸ்ரேயாஸுக்கு காத்திருக்கும் சவால்கள் குறித்து பிசிசிஐ அமைப்பின் தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி கூறுகையில், ‘ஸ்ரேயாஸ், முதல் தர போட்டிகளில் 50க்கு மேல் பேட்டிங் சராசரி வைத்துள்ளார். சுமார் 10 ஆண்டுகள் விளையாடிய பின்னரும் இப்படியான சராசரியை வைத்திருப்பது அசாதரணமானது. இப்படி தொடர்ந்து முதல் தர போட்டிகளில் சாதித்து வரும் ஒரு வீரருக்கு சர்வதேச அளவில் வாய்ப்பு கிடைக்கும் போது அதைப் பயன்படுத்தி தன் திறனை வெளிக்காட்ட வேண்டும். அதைத் தான் ஸ்ரேயாஸ் இந்தியாவுக்காக இதுவரை விளையாடிய போட்டிகளில் செய்து காண்பித்துள்ளார்.

குறிப்பாக தன் முதல் டெஸ்ட் தொடரிலேயே சிறப்பாக விளையாடியுள்ளார் ஸ்ரேயாஸ். அதே நேரத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் என்பது ஸ்ரேயாஸுக்கு மிகுந்த சவால்கள் நிரம்பியதாக இருக்கும். அதில் அவர் சாதிப்பது அணிக்கும் அவருக்கும் முக்கியமானதாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருந்த அணியின் மூத்த வீரர் ரோகித் சர்மா, காயம் காரணமாக விலகியுள்ளார். மேலும் மூத்த வீரர்களான அஜிங்கியே ரஹானே மற்றும் செத்தேஷ்வர் புஜாரா ஆகியோர் பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் திணறி வருகின்றனர். இதனால் தென் ஆப்ரிக்க தொடரில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஸ்ரேயாஸுக்கு அனைத்துப் போட்டிகளிலும் விளையாட வாய்ப்பு கொடுக்கப்படலாம்.

CRICKET, GANGULY, BCCI, INDVSSA, SHREYAS IYER, கங்குலி, ஷ்ரேயாஸ் ஐயர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்